500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தாலி வாங்கக்கூட இயலாமல் தவிப்பு: நாளை முகூர்த்தநாள்: திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் பாதிப்பு
எஸ்.கோபாலகிருஷ்ணன்
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் நாளை (நவ.11) திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் தாலிகூட வாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை முகூர்த்த நாள்
நாளை (நவ.11) முகூர்த்த நாள் என்பதால் பலரும் திருமணத்துக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள் விழாவுக் குத் தேவையான அடிப்படை செலவுகளை செய்வதற்குக்கூட நூறு ரூபாய் நோட்டுகளே வேண்டும் என்று கடைகளில் கேட்பதால் கையில், 500,1000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சரவணன், கூறும்போது, “நவம்பர் 11-ம் தேதி (நாளை) எனக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவைகளாக அறிவித்துள்ளனர். என்னிடம் இருப்பது பெரும்பாலும் 500, 1000 ரூபாய் நோட்டுகள்தான். எனவே காய்கறி, மளிகைப் பொருட்கள் தொடங்கி அனைத்துக்கும் பணப் பட்டுவாடா செய்யமுடியாமல் தவிக்கிறேன்.
இந்த அறிவிப்பால் உடனடி யாக பாதிக்கப்பட்டிருப்பது எங்களைப்போன்று திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள்தான். எனவே, திருமண அழைப்பிதழ் போன்றவற்றை ஆதாரமாக பெற்றுக்கொண்டு எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமாவது வங்கிகள் மூலம் தேவையான 100 ரூபாய் நோட்டுகளை உடனடியாக வழங்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்” என்றார்.
நகைக்கடையில் மறுப்பு
கோட்டூரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத, மணமகனின் தாயார் ஒருவர் கூறும்போது, “என் மகனுக்கு நவம்பர் 11-ம் தேதி (நாளை) திருமணம் வைத் துள்ளேன். அதற்காக ஏற்கெனவே முன்பணம் கொடுத்து வைத்திருந்த தாலிக்கு மீதத்தொகையை கொடுத்து, தாலியை வாங்கலாம் என்று நகைக் கடைக்குச் சென்றேன். ரூ.500 நோட்டுகளாக இருப்பதால் அதனை வாங்க மறுத்துவிட்டனர். பல இடங்களில் கேட்டும் 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை.
திருமணத்துக்காக தாலி வாங்க வந்தவரை கடையில் திருப்பி அனுப்பியது எனக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவழியாக, என் மகன் வேலைபார்க்கும் நிறுவனத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கடனாகப் பெற்று பிரச்சினையை சமாளித்தோம். மீதமுள்ள செலவுக்கு என்ன செய்வது என்று கவலையாக உள்ளது” என்றார்.
மன்னார்குடி ரோட்டரி சங்கத் தலைவரும், நிதி ஆலோசகருமான செந்தில்குமார் கூறியது:
தனது வருமானத்தை மீறி பெரும்பொருட்செலவு செய்து சுபகாரியங்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒவ்வொரு சாமானிய, நடுத்தர குடும்பத்தினரின் தன்னம்பிக்கைக்கும் பின்புலமாக இருப்பது மொய்ப் பணம் ஒன்றுதான்.
தற்போது அதிக புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவை என்று அறிவித்திருப்பதால், மொய்ப் பணம் வைக்க விரும்புபவருக்கு ரூ.100 அல்லது புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விரைவாக கிடைத்தால்தான் மொய் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை மொய்யாக வைத்தால் செல்லாத பணத்தை வைத்ததாகிவிடுமே என்ற உணர்வு இருதரப்பிலும் உருவாக வாய்ப்புள்ளது. இது வெளிப்படையாக விவாதிக்க முடியாத பிரச்சினை. பொருளாதர சீர்திருத்தங்களில் இந்த பாதிப்பை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்றார்.
இதுகுறித்து திருமண மண்டப உரிமையாளர்கள் கூறியபோது, “வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை செல்லாத பணத்தை வங்கியில் செலுத்த அவகாசம் கொடுத்துள்ளனர். அதனால் திருமண மண்டப வாடகையைப் பெற்றுக்கொள்வதில் நாங்கள் கெடுபிடி எதுவும் செய்யவில்லை” என்றனர்.
மளிகை கடைக்காரர்கள் கூறியபோது, “மளிகை கடைகளில் தெரிந்தவர்களிடம் மட்டும் 500, 1000 ரூபாயைப் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், சில்லறை வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
No comments:
Post a Comment