தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பதுக்கல் பணம் வெளிவர வாய்ப்பு: சோதனை தீவிரப்படுத்தப்படுமா?
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பொதுமக்கள் மாற்றிக்கொள்வதில் சிக்கல் இருக்காது என்பதால், பதுக்கி வைத்த கருப்பு பணத்தை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சியினர் பட்டுவாடா செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற் பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்க நாடு முழு வதும் நேற்று முன்தினம் இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அவற்றை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனால், பணம் பதுக்கிய பெரும் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் அந்தப் பணத்தை எப்படி மாற்றுவது எனத் தெரியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தப் பணத்தை மாற்ற அவர்கள் மறைமுகமாக பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்றும், அதற்காக அவர்கள் ஆடிட்டர்களிடம் ஆலோசனை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே 19-ம் தேதி தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றம், அரவக்கு றிச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தொப்பு தொகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர், பணத்தைத் தண்ணீராக செலவு செய்து வருகின்றனர். வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களுடைய கருப்பு பணம், தேர்தல் செலவு போர்வையில் ஏற்கெனவே வெளியே வந்துகொண்டு இருக்கிறது. தற்போது 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் தேர்தல் செலவு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக பதுக்கி வைத்த பணத்தை நேரடியாக மாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.
பிரச்சாரத்துக்கு வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நேற்று சாப்பாடு, டீசல், பெட்ரோல், டீ, வடை, மைக் செட் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் பதுக்கி வைத்திருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை வழங்க முடியாமல் அரசியல் கட்சியினர் சிரமம் அடைந்தனர்.
வழக்கமாக, தேர்தலுக்கு முந்தைய 2 நாளில் அந்தந்த ‘பூத்’ நிர்வாகிகள் மூலம் பணம் பட்டுவாடா நடக்க ஆரம்பிக்கும். அதனால், பதுக்கி வைத்திருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாக்காளர்களுக்கு திட்டமிட்டபடி பட்டுவாடா செய்து, அந்தப் பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொள்ளும்படி வாக்காளர்களிடம் கூறி விடலாம் என அரசியல் கட்சியினர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வாக்காளர்கள், அந்தப் பணத்தை வங்கிகளில் மாற்றிக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்பதால், அவர்களும் அரசியல் கட்சியினர் வழங்கும் பணத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. அதனால், தேர்தல் நடக்கும் இந்த தொகுதிகளில் கருப்பு பணம் அதிக அளவு வெளிவர வாய்ப்பு உள்ளதால் தேர்தல் ஆணையம் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment