அகோலா: தனக்கு டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்கு டிரைவராக சேவகம் செய்த, மாவட்ட கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்ன விஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஒருவர் ஓய்வு பெறும் போதும், அவரது பதவிக்கேற்ப, உடன் பணிபுரிவர்கள் பிரியாவிடை அளிப்பது வழக்கம். அகோலா மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்துக்கு, டிரைவராக பணிபுரிந்த, திகம்பர், 58, சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவரது பணிக்காலத்தில், 18 கலெக்டர்களுக்கு டிரைவராக இருந்தார்.
ஓய்வு பெறும் நாளில், திகம்பருக்கு வித்தியாசமான பரிசளிக்க, கலெக்டர் முடிவு செய்தார். அதன்படி, பணி நிறைவு நாளன்று, திகம்பரை, காரின் பின் சீட்டில் அமர வைத்து, அவரது வீடு வரை, கார் ஓட்டி சென்றார், கலெக்டர். ''திகம்பர், அரசு பணியில், 35 ஆண்டுகள் டிரைவராக பணிபுரிந்து உள்ளார். அவரது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்காக கார் ஓட்டிச் சென்றேன்,'' என, கலெக்டர் ஸ்ரீகாந்த் கூறினார்.
ஓய்வு பெறும் போது கலெக்டர் அளித்த பரிசை, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று கூறிய திகம்பர், கலெக்டருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். டிரைவருக்கு, டிரைவராக சிறிது நேரம் சேவகம் செய்த கலெக்டரை, அப்பகுதிமக்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment