Saturday, November 5, 2016


துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவா? சென்னைப் பல்கலை. பேராசிரியர்கள் எதிர்ப்பு
By DIN | Last Updated on : 05th November 2016 02:44 AM | அ+அ அ- |


சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் பட்டச் சான்றிதழில் துணைவேந்தர்தான் கையெழுத்திட வேண்டும், அதற்கு மாறாக பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஆர்.தாண்டவன் பதவிக் காலம் கடந்த ஜனவரியோடு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு 9 மாதங்களுக்கு மேலாகியும் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர்கல்வித் துறைச் செயலர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுதான் பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது. துணைவேந்தர் இல்லாததால் பட்டமளிப்பு விழா நடத்துவது இழுபறியில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக, துணைவேந்தர் எப்போது நியமிக்கப்படுவார், பட்டமளிப்பு விழா எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையேயும், மாணவர்களிடையேயும் எழுந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், துணைவேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, விழா தேதிக்கு ஒப்புதல் பெறுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆட்சிக் குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவர் கூறியது:

பட்டச் சான்றிதழில் துணைவேந்தர் கையெழுத்திடுவதே மரபு. அதை மாற்றி, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் தாற்காலிக ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம் என்று கூறி அந்தத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods