ஓட்டு போட ரெடியா? வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் 'சர்வே' எடுக்கும் தேர்தல் ஆணையம்
புதுதில்லி: இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்று ஓட்டுப் போடுவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உள்ள விருப்பத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையமானது வெள்ளிக்கிழமை முதல் 'ஆன்லைன் சர்வே' ஒன்றைத் துவக்கி இருக்கிறது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ளுதல், அவர்கள் வாக்களிப்பிற்கு பதிவு செய்து கொள்ளுதலை உறுதி செய்தல் மற்றும் அவர்கள் எந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வதே இந்த சர்வேயின் நோக்கமாகும்.
அத்துடன் அவர்கள் எந்த முறையில் வாக்களிக்க விரும்புகிறார்கள் மற்றும் அதில் அவர்களுக்கு உள்ள சவால்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு இந்த சர்வே பயன்படும்.
இந்த சர்வே மூலம் கிடைக்கும் தகவல்கள் அரசு மற்றும் சட்டம் இயற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
மக்களுக்காக நடைபெறும் நமது அரசாங்கத்தில் ஒவ்வொருவரின் குரலும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.அந்த வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்த சர்வே உதவும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதி இந்த அறிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment