திருநெல்வேலி என்.ஜி.ஓ.,காலனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பாலாஜி சைவ உணவகத்தை, அதே பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்ணு, கோபி ஆகியோர் நடத்துகின்றனர்.
இவர்களது ஓட்டல் அருகே பெருமளவு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்களின் குடும்பங்கள் அதிகம் உள்ளன.
500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று இரவிலேயே மாணவர்கள், அரசு ஊழியர்கள் கையில் பணம் இருந்தாலும் நுாறு ரூபாய் நோட்டுகள் இல்லாததால், டீ குடிக்க கூட முடியாமல் சிரமப்பட்டனர்.
இதை நேரடியாக பார்த்த இருவரும், ''யார் வேண்டுமானாலும் தங்களது ஓட்டலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். முடிந்தால் பணம் கொடுங்கள், இல்லாவிட்டால் நினைவில் வைத்துக்கொண்டு பின்னர் கொடுங்கள்,''என கூறி கடந்த இரு நாளும் வந்தவர்களுக்கெல்லாம் உணவு வழங்கினர். நேற்று பாங்குகள் திறக்கப்பட்டு ஓரளவு நிைலமை சீரடைந்ததாலும், நேற்று இரவு வரையிலும் உணவு வழங்கினர்.
இதுகுறித்து விஷ்ணு கூறுகையில், நாங்கள் ஓட்டல் தொழிலை அண்மையில் தான் துவக்கினோம். நாங்கள் தினம் தினம் பார்க்கும் மனிதர்கள் பட்டினியால் வாடுவதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். பணம் இல்லை என்பதற்காக உணவு இல்லை என்று மறுப்பதோ, உணவு பண்டங்களை வைத்துக்கொண்டு கடையை வழக்கத்திற்கு மாறாக இழுத்து மூடுவதிலோ எங்களுக்கு உடன்பாடில்லை.
எனவே பலரும் எங்கள் ஓட்டலில் சாப்பிட்டுச்சென்றார்கள். அவர்கள் நிலைமை சகஜமான பிறகு பணம் தரலாம். தராமலும் போகலாம். ஆனால் பசியோடு வந்த அவர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறியதில் எங்களுக்கு திருப்தி, என்றார்.
இவரை பாராட்ட... 9786077881 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment