எரிப்பார்களா புதைப்பார்களா?
ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் இனி, செல்லாது' என்ற, அறிவிப்பால், பாதாளத்தில் விழுந்தது போன்று பதறுகின்றனர், கறுப்பு பண பதுக்கல்காரர்கள். இவர்கள், தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற பரிதவிப்பில் உள்ளனர்.
அரசியல், அதிகார மட்டத்தில் செல்வாக்கு மிகுந்த நபர்களை தொடர்பு கொண்டு, உதவி கோரி வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சட்டவிரோத பண பரிமாற்றங்களை வருமான வரித்துறையினர், தற்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், அதையும் மீறி சில சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, அம்பலத்துக்கு வந்துள்ளது.
தனியார் பள்ளி ஊழியர்களின்வங்கி கணக்கில் கறுப்பு பணம்
திருப்பூரிலுள்ள தனியார் பள்ளியில் பணி யாற்றும், பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியை கூறியதாவது:எங்களது பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 100ஐ தாண்டும். நேற்று முன் தினம், பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து, அவசர கூட்டத்துக்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு வந்தது. என்னவோ, ஏதோ, என்ற தவிப்புடன் நாங்கள் பங்கேற்றோம்.
அந்த கூட்டத்தில் பேசிய பள்ளி நிர்வாகி, 'எங்களிடம் பழைய, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. மத்திய அரசின் திடீர் உத்தரவால் அவற்றை, வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்துவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன.
இதனால், ஊழியர்களான உங்களின் வங்கிக் கணக்கில், ஒவ்வொருவரின் பெயரிலும், குறிப் பிட்ட தொகையினை செலுத்த ஏற்பாடு செய்கிறோம்.அந்த தொகையை நீங்கள் செலுத் தியதாகவே வங்கி கணக்கில் இருக்கட்டும்.
'நான்கு, ஐந்து மாதங்கள் வரை, அந்த பணத்தை நீங்கள் எங்களுக்கு திரும்பத்தர வேண்டாம். அதன்பின், மாதத்தவணை அடிப்படையில், உங்களது சம்பளத்தில் இருந்து நாங்களே மாதம் 5,000 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து கொள்கிறோம்; இது, வட்டியில்லா கடனாக இருக்கட்டும். இதுநாள் வரை, இந்நிறுவனம், உங்களுக்கு உதவியிருக்கிறது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்' என்றார்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவை, ஊழியர் களில் பலரும் ஏற்கவில்லை. காரணம், எங்களது பெயரிலான வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டால், அதற்கு நாங்களே பொறுப்பாளி; வருமானவரி செலுத்தவும் நேரிடலாம். தவிர, இது ஒருவித முறைகேடும் கூட. நாங்கள் முன்பு, ஒரு முறை ஊதிய உயர்வு கோரியபோது, நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறியது பள்ளி நிர்வாகம்.
இப்போது, எப்படி இவ்வளவு பணம் வந்தது. பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணம், செல்லாமல் போவதை தடுக்க, புதிய நோட்டுகளாக மாற்றிட முயற்சி செய்கிறது. இது தொடர்பாக, வருமானவரித்துறை மற்றும்
ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அந்த ஊழியர் தெரிவித்தார்.
வேறு வழி உண்டா...
கோவையை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமை யாளர் கூறியதாவது:வெளிமாவட்டம் ஒன்றில், எனது நண்பர் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். மத்திய அரசின் அறிவிப்புக்குப்பிறகு என்னை தொடர்பு கொண்ட அவர், தனக்கும், தனது பங்குதாரர்களுக் குச் சொந்தமான, ஏறத்தாழ 15 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. அவற்றை செல்லத்தக்கதாக மாற்ற என்ன செய்ய வேண்டும். வேறு வழி ஏதாவது இருக்கிறதா, என்று கேட்டார்.
வருமானத்துக்குரிய கணக்கை முறையாக காட்டி யிருந்தால், இதுபோன்ற நெருக்கடி, பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்காது. தற்போது அவர், அந்த பணத்தை கணக்கு காண்பித்தால், அல்லது அதிகாரி களால் கண்டறியப்பட்டால், 200 மடங்கு தொகை யினை அபராதமாக செலுத்த நேரிடும். அதனால், கணக்கில் காட்டவும் முடியா மல், அழிக்கவும் மனமில்லாமல், ஏறத்தாழ பைத்தியம் பிடித்தது போன்ற நிலைக்கே, நண்பர் சென்றுவிட்டார்.
கறுப்பு பணத்தை குழிதோண்டி புதைப்பது நல்லதா, எரிப்பது நல்லதா என்ற விவாதத்தையும் தற்போது கேட்க முடிகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
வாகனங்களில் பறக்குது 'கறுப்பு' குறையுது தங்கக்கட்டி இருப்பு
கோவை நகரை சேர்ந்த முக்கிய வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் அறிவிப்பு, கறுப்பு பணம் பதுக்கியவர்களின் துாக்கத்தை தொலைத் திருக்கிறது. அவர்கள் வசமிருக்கும் கோடிக்கணக் கான மதிப்பிலான, 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை எல்லாம் செல்லாக்காசாக, வெற்றுத்தாளாக மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு மாற்றிவிட்டது. பதுக்கிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பை காப்பாற்ற, பதுக்கல்காரர்கள் துடிக்கின்றனர்.
வாகனங்களில் பணத்தை ஏற்றிக்கொண்டு அங்கு மிங்குமாக அலைகின்றனர் என்றும் கூட சொல்கி றார்கள். சிலர், தங்களது நட்பு மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி, தங்க வியாபாரிகளிடம், பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, தங்கக் கட்டிகள் வாங்கியுள்ளனர்.
மார்க்கெட்டில் தற்போது, சொக்கத்தங்கத்தின் விலை கிராம் 3,200 ரூபாய் என்றால், மத்திய அரசின் நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கிராம் 4,200 ரூபாய் வரை விலை வைத்து, வியாபாரி கள் விற்கின்றனர். இதன் மூலம், கிலோவுக்கு குறைந்தது, 10 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. வாங்கும் நபருக்கும் நஷ்டம் கிடையாது.
காரணம், அவர், கூடுதல் பணம் கொடுத்தாவது தங்கத்தை வாங்காவிடில், பதுக்கி வைத்திருக்கும் மொத்த கறுப்பு பணத்தின் மதிப்பையும் இழந்து விடுவார். இந்த சட்டவிரோத வியாபாரத்தின் மூலமாக, மிகப் பெரிய அளவில், மொத்தமாக அதாவது 100,200 கோடி அளவிலான கறுப்பு பணத்தை, தங்கமாக மாற்றிக்கொள்ள வாய்ப் பில்லை என்றபோதிலும், ஒரு சில கோடி ரூபாய் களை வைத்திருப்பவர்கள், மாற்றிக்கொள்ள இயலும்.
வருமானவரி செலுத்தப்படாத, கணக்கில் காட்டப் படாத, கறுப்பு பணத்தை, அதாவது 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை பெறும் தங்க வியாபாரிகள், அவற்றை தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி கொள்வதில் எவ்வித பிரச்னையும் இருக்காது. காரணம், அவர்கள் சட்ட ரீதியாக கொள்முதல் செய்து, கணக்கு காட்டி இருப்பு வைத்திருந்த தங்கத்துக்கு ஈடான தொகையினை, வங்கி கணக்கில் பழைய நோட்டாக இருப்பினும் செலுத்த முடியும்.
அதேவேளையில்,கையிருப்பு தங்கம் முழுவதும் விற்று முடிக் கப்பட்டுவிட்டபின், புதிதாக
தங்கம் கொள் முதல் செய்யும்போது,பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை செலுத்த முடியாது என்பதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இருப்பினும், மேற்கண்ட 'பிசினஸ்'சில், நகைத்தொழிலுடன் தொடர்பில் இருக்கும் மிகச்சிலர் ஈடுபட்டுள்ளனர். பிறர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
'கறுப்பு பண பதுக்கல்காரர்கள், தாங்களாக முன்வந்து, தங்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பை காட்டி, 47 சதவீத வரியை செலுத்தலாம். இந்த பணத்தை எப்படி சம்பாதித்தோம் என்பது பற்றியெல்லாம் தெரிவிக்க வேண்டியதில்லை' என, தெரிவித்தது. இத்திட்டத்தில், சேர்ந்தவர்கள் மிகச்சிலரே.
'ஒவ்வொரு முறையும், மத்திய அரசில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் இவ்வாறு தான் மிரட்டுகிறார்கள்; இதை 'சீரியஸ்' ஆக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை' என்றே, பலரும் அலட்சியமாக இருந்துவிட்டனர். சிலர், மத்திய அரசின் திட்டத்தை ஏற்று, கறுப்பு பணத்தை கணக்கில் காண்பித்தார்கள். அதற்குண்டான வரியினை செலுத்த மத்திய அரசு, ஓராண்டு கால அவகாசமும் அளித்திருக்கிறது.
மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று, அன்று கணக்கு காண்பித்தவர்கள், இன்று நிம்மதியாக இருக்கிறார்கள். ஒரு கோடி ரூபாயில், 47 லட்சம் அரசுக்கு போனாலும், 53 லட்சம் மிஞ்சு கிறது. ஆனால் இன்று, கறுப்பு பண கணக்கு காண்பிக்காதவர்களின் நிலையோ பரிதாபம். பதுக்கி வைத்திருக்கும் ஒட்டுமொத்த பணத் தின் மதிப்பும் போய்விட்டது. துாக்கமிழந்து தெருத்தெருவாக அலைகிறார்கள்.
தங்களுக்கு அறிமுகமான வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் வங்கி அதிகாரிகளின் உதவியை நாடுகிறார்கள். தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு, இனி என்ன செய்ய முடியும்?
'டாஸ்மாக்'கில்நள்ளிரவு 'பண மாற்றம்'
கோவையில் பணியாற்றும் 'டாஸ்மாக்' பணியாளர்கள் சிலர் கூறியதாவது:மதுவிற்ற பணத்தை வங்கியில் செலுத்தும் முன், எங்களுக்கு ஒரு வாய்மொழி உத்தரவு வந்தது, 'பணத்தை அப்படியே வைத்திருங்கள்' என்று. எதற்கு இப்படி கூறினார்கள் என, தெரியாமல் குழம்பிப் போனோம்.
அதற்கான விடை அடுத்த சில மணி நேரங்க ளில் கிடைத்தது. முக்கிய புள்ளி ஒருவரின் பெயரிலான நபர்கள், 1,000, 500 ரூபாய் நோட்டு களுடன் டாஸ்மாக் கடைகளுக்கு, வாகனங் களில் பரபரப்புடன் வந்தார்கள்.
அவர்கள் கோவை, திருப்பூர், நீலகிரி கடை களுக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சென்றிருக்கக்கூடும். தாங்கள் கொண்டு வந்திருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகளை எங்களிடம் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடான மதிப்பில் 100, 50 ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்றுவிட்டார்கள். 'அவர்கள் வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது' என சொல்லுமளவுக்கு, அவ்வளவு வேகம்,
அவர்களது நடவடிக்கையில்.வந்த நபர்கள் யார், அனுப்பியது யார், பணத்தை எங்கு கொண்டு போனார்கள் என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது. இந்த பண மாற்று சம்பவம், டாஸ்மாக்கில் மட்டுமல்ல; அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் நடந்ததாக கூறப்படுகிறது.
சிலர், தங்களது நட்பு மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி, தங்க வியாபாரிகளிடம், பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, தங்கக் கட்டிகள் வாங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment