Friday, November 11, 2016

கறுப்பு பணத்தை 'வெளுக்க' அறக்கட்டளைகள் : புதிய வழியில் பதுக்கல்காரர்கள்

செல்லாத ரூபாய் நோட்டுகளை, சட்டப்பூர்வமாக மாற்ற, அறக்கட்டளைகள் துவக்க, முக்கிய பிரமுகர்கள் திட்டமிடுவதால், புதிதாக பதிவாகும் அறக்கட்டளைகளை, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் பயன்பாட்டில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்தது. இது, அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்தாலும், கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள, கோடீஸ்வரர்கள், பெரும் புள்ளிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. தங்களது வேலையாட்கள், தெரிந்தவர்கள் மூலம், வங்கிகளில், பழைய நோட்டுகளை மாற்றினாலும், சில ஆயிரம் ரூபாய்க்கு மேல், பதுக்கல் பணத்தை மாற்ற முடியாது. எனவே, கோடிக்கணக்கில் குவித்து வைத்திருக்கும் கறுப்பு பணத்தை, சட்டப்பூர்வமானதாக மாற்ற, அவர்கள் இரவு, பகலாக, மூளையை கசக்கிக் கொண்டிருக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் சிலர், பயந்து போய், 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை எரித்ததாக செய்தி வெளியானது.ஆனால், சற்று விவரமான பெரும் புள்ளிகள், குறிப்பாக, அரசியல்வாதிகள், அறக்கட்டளைகள் துவக்கி, கறுப்பு பணத்தை, சட்டப்படி அங்கீகாரம் உடையதாக மாற்ற திட்டமிட்டு வருவதாக, அரசியல் கட்சிகள் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: பழைய ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், சில அரசியல்வாதிகள், கறுப்பு பணத்தை மாற்ற, நல்ல காரியங்களை செய்வதற்கான அறக்கட்டளை போல, போலி அறக்கட்டளைகள் துவக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள், அந்த அறக்கட்டளைகளின் நிர்வாக குழுவில், படிப்பறிவில்லாத, தாங்கள் இடும் கட்டளைகளுக்கு கீழ்படியும் நபர்களை, உறுப்பினர்களாக நியமிப்பர். பின், அறக்கட்டளைகளுக்கு, பணத்தை நன்கொடை கொடுத்ததாக கணக்கு காட்டி, அதை செல்லத்தக்கதாக மாற்ற திட்டம் தீட்டி வருகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள், புதிதாக பதிவாகும் அறக்கட்டளைகளையும், அவற்றுக்கு பெரும் தொகையை நிதியுதவியாக அளிப்போரையும் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024