Wednesday, November 9, 2016

ரிடையர்மெண்டுக்குப் பிறகு; என்னென்னவோ செய்யலாம்?


retire_3

ரிடையர்மெண்டுக்குப் பிறகு;

என்னென்னவோ செய்யலாம்?

மனமுவந்தும், மனத் திருப்தியோடும் செய்வதற்கு எத்தைனையோ விசயங்கள் இருக்கின்றன.

ஆனால் அவையெல்லாம் அவரவர் மனதளவில் நின்று போகின்றன. பின்பு நடப்பதெல்லாம்;

ஆண்கள்/ பெண்கள் என்ற வேறுபாடின்றி ரிடையர்டு ஆன எல்லோருமே ஒரு குறுகிய வாழ்க்கை வட்டத்தில் சிக்குண்டு மீள முடியாதவர்களாகிப் போகிறார்கள்
கூட்டுக் குடும்பம் எனில் பேரன் பேத்திகளை பள்ளிக்கு கொண்டு விட்டு, திரும்ப அழைக்கும் வேலையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆண்கள் மாதா மாதம் ரேஷன் கடைக்குச் சென்று திரும்புகிறார்கள். கரண்ட் பில் கட்டும் பொறுப்பேற்கிறார்கள். மளிகைக் கடைக்கும், மெடிக்கல் ஷாப்புக்கும் சென்று வரும் தலையாய கடமை இவர்கள் தலையில் ஏற்றப்படுகிறது.
பெண்கள் மருமகளோ, மகளோ வேலைக்குச் செல்பவர்கள் எனில் சமையற்கட்டுக்கு பொறுப்பாளராக்கப்பட்டு விடுகிறார்கள்.
ஒழிந்த நேரங்களில் பேக்கேஜ் டூர் பதிவு செய்து கொண்டு நண்பர்கள் அல்லது உறவினர்களோடு ஆன்மீகச் சுற்றுலா சென்று திரும்புகிறார்கள்.
பிள்ளைகள் வெளியூரில் இருந்தால் அடிக்கடி அவர்களிருக்கும் இடங்களுக்குச் சென்று திரும்புகிறார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் எனில் மகன் வீட்டில் பத்து நாள், பெரிய மகள் வீட்டில் 7 நாள். சின்ன மகள் வீட்டில் 5 நாள் என்று கால்ஷீட்டை பிய்த்துக் கொடுத்து விட்டு மாதக் கடைசியில் சொந்தக் கூட்டில் அக்கடா என்று உட்காரும் போது மீண்டும் அடுத்த ரவுண்டு ஊர் சுற்றலுக்கு அழைப்பு வந்து விடுகிறது.
வாழ்வின் ஏதோ ஒரு திருப்தியின்மையை காம்ப்ரமைஸ் செய்து கொள்வதற்காக என்று தொடங்கி அன்லிமிடட் மீல்ஸ் போல அன்லிமிடட் டி.வி சீரியல் ரசிகையாகவோ, செய்திச் சேனல் ரசிகர்களாகவோ தங்களை மனமாற்றம் செய்து கொள்கிறார்கள்.
போதாக்குறைக்கு ரிடையர் ஆனவர்கள் தானே... வேறென்ன வேலையிருக்கப் போகிறது? என்று அவரவர் குடும்பப் பஞ்சாயத்துகளோடு சேர்த்து அறிந்தவர்,தெரிந்தவர் உற்றம், சுற்றம் என அனைத்து தரப்பினரது குழப்பப் பஞ்சாயத்துகளிலும் தலையிட்டு கருத்து சொல்லியும், சொல்லாமலும் நொந்து நூடுல்ஸ் ஆகிறார்கள்.

இது தான் ரிடையர்மெண்ட் வாழ்க்கையா?

அன்பான பெரியோர்களே, தாய்மார்களே...

உங்கள் மனதைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்களேன், பரபரப்பாய் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ரிடையர்மெண்டுக்குப் பிறகான நாட்களில் வாழ்வை ரசிக்க பிரமாதமாய் என்னவெல்லாம் திட்டம் போட்டீர்கள் என்று? அதெல்லாம் புஸ்வாணமாய்ப் போவதேன்?!

என் அம்மா பள்ளி ஆசிரியையாக இருந்து ரிடையர் ஆனவர். அம்மா ரிடயர்மெண்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வீட்டுக்கு வெளியே அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும் வாங்கிக் கொண்டு வந்து போட்டுக் கொண்டார். “ஏம்மா... அதான் கிரைண்டர், மிக்ஸில்லாம் இருக்கே? இது எதுக்கு? என்றதற்கு; ’இல்லை நான் ரிடையர்ட் ஆனதுக்கு அப்புறமா கிரைண்டர், மிக்ஸி யூஸ் பண்றதைக் குறைச்சிட்டு இனிமே நம்ம பழைய வாழ்க்கை முறைப்படி அம்மிக்கல்லும், ஆட்டுகல்லில் அரைத்துத் தான் சமைக்கப் போறேன்; அதான் ஹெல்த்தியானது, பிடிச்சதை ருசிச்சு சாப்பிட்டு வாழ்க்கையை அதன் போக்கில் ரசிச்சு வாழப் போறேன்” என்றார்.

இந்தப் பதில் நான் எதிர்பாராதது... ஆனால் சந்தோசமாக இருந்தது.

சில மாதங்கள் கடந்தன.

அடுத்த முறை அம்மா வீட்டுக்குப் போகும் போது பார்த்தால் வீட்டுக்கு வெளியே அம்மிக் கல்லும், ஆட்டுக்கல்லும் போட்டது போட்டபடி புதுக் கருக்கு மாறாமல் அப்படியே இருந்தன. அதில் மாவரைத்த சுவடே இல்லை. என்னாச்சும்மா? என்றதற்கு “ஆசையா தான் வாங்கிப் போட்டேன், ஆனா முடியலம்மா... மூட்டு வலி பாடாய் படுத்துது, குனிஞ்சு உட்கார்ந்து அரைக்க முடியல... வீடுன்னு இருந்தா சாஸ்திரத்துக்கு அம்மியும், ஆட்டுக்கல்லும் இருக்கணும், இருந்துட்டுப் போகட்டும்... அவ்வளவு தான்” என்றார்.”

அம்மாவைப் பார்க்க பாவமாய் இருந்தது. ”ம்மா மூட்டு வலி சரியானதும் அரைக்கலாம்மா” என்று சொல்லத்தான் ஆசை, ஆனால் பெரும்பாலான அம்மாக்களுக்கு மூட்டு வலி சரியாக மருத்துவத்தை தாண்டி உளவியலும் அல்லவா கருணை காட்ட வேண்டியதாக இருக்கிறது. அதனால் நான் வெறும் புன்னகையோடு நிறுத்திக் கொண்டேன்.

ஆனால் மனதுக்குள் ஒரு குரல் இப்போது வரை விடாது ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

அம்மாவின் அந்த சின்னஞ்சிறு எதிர்பார்ப்பு பொய்த்துப் போக மூட்டு வலி மட்டுமா காரணமாக இருக்க முடியும்? இல்லை... இல்லவே இல்லை.

அட இனி என்ன? இந்த வயதில் போய் அம்மி, ஆட்டுக்கல்லில் எல்லாம் அரைத்து ரசித்து சமைத்து என்ன ஆகப் போகிறது? ருசித்துச் சாப்பிட்டு சமையலைப் பாராட்ட பிள்ளைகளா உடனிருக்கிறார்கள் என்ற வெற்று உணர்வு ஆக்ரமித்திருக்கலாம். அல்லது அறுபது கடந்தாச்சு இனி என்ன ருசி வேண்டி இருக்கு? உப்பு, புளி, காரம் என எதாவது தூக்கலாக சாப்பிட்டு விட்டால் நாள் முழுக்க அஜீரணத் தொல்லையாகி விடுகிறது. போதும்... போதும் என்ற சலிப்பு தான் எல்லாவற்றிற்கும் மூல காரணமாயிருக்க முடியும். சலிப்பு வந்த பின் வாழ்வின் மீதான் சுவாரஸ்யம் படிப்படியாக குறையத் தானே செய்யும். அப்படியே குறைந்து, குறைந்து பின்னொரு நாளில் அது தொலைக்காட்சி சேனல்களின் சீரியல் பைத்தியத்தில் வந்து முடிவுறும் பட்சத்தில் சமையலில் மட்டுமல்ல வாழ்விலும் பிறகெப்போதும் அவர்கள் திட்டமிட்ட அந்த சுவாரஸ்யங்களைத் தேடிக் கண்டடையவே முடிவதில்லை.

ஆதாலால் குடும்பச் சுமையிலிருந்தும், சேனல் சீரியல் அடிக்ஸனில் இருந்தும், குடும்பத்தின் குழப்பப் பஞ்சாயத்துகளில் இருந்தும் ரிடையர்டு சிட்டிஸன்களை காப்பாற்ற ஏதாவது சிந்திக்கலாமே என்று சிந்தித்ததன் விளைவு தான் இக்கட்டுரை :)



ரிடையர்மெண்டுக்குப் பிறகான வாழ்வின் சலிப்பை எப்படிக் கலைவது?
முதலில் ஃபேலியோ டயட்காரர்கள் சொல்வதைப் போல பிளட் டெஸ்ட் எடுத்து விடுங்கள். முடிந்தால் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக் அப் கூட செய்து கொள்ளலாம். சீனியர் சிட்டிஸன்களுக்கு ஆஃபர்கள் உண்டாம். வயதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை. நாம் ஆரோக்கியமாகவே இருக்கிறோம் என்ற தன்னம்பிக்கை உணர்வு தான் முதல் தேவை. இதை தள்ளிப் போட்டுக் கொண்டே போகப் போக வாழ்வும் நம்மைத் தள்ளிக் கொண்டே போய் ஒரு மூலையில் உட்கார வைத்து விடுகிறது. ஆகவே முதலில் இதைச் செய்து விடலாம்.
அடுத்ததாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் நம்மோடு ஒத்த உள்ளத்தில் புரிந்துணர்வோடு பழகிப் பின் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்த பால்ய நண்பர்களை மெனக்கெட்டு தேடிக் கண்டு பிடியுங்கள். அவர்களோடு அலைபேசித் தொடர்பிலிருங்கள், முடிந்தால் சமயம் கிடைக்கையில் சந்திக்கவும் தவறாதீர்கள். இந்த வாழ்வு உங்களுக்கானது. குழந்தைகள், சொந்தங்களுக்காக மட்டுமே வாழ்ந்து முடித்து விட்டால் பிறகு நிறைவேறாத ஏக்கங்கள் பட்டியல் அதிகமாகிக் கொண்டே போகும்.
வயதானால் ஆன்மீகச் சுற்றுலா தான் போக வேண்டும் என்று எந்த நாட்டிலும் பிரத்யேக சட்டங்கள் இல்லை. ஆதலால் உள்ளுக்குள் இளமையாக எண்ணிக் கொண்டு அவரவர் வாழ்க்கைத் துணையோடு மனம் விரும்பும் இடங்களுக்கு அடிக்கடி இல்லா விட்டாலும் ஆண்டுக்கு ஒரு முறையாவது நான்கைந்து நாட்கள் டூர் சென்று திரும்புங்கள்.
இளமையில் எதையாவது கற்றுக் கொள்ள விரும்பி; நேரமோ, பொருளாதார நிலையோ ஏதோ ஒன்று ஒத்துக் கொள்ளாது போய் கற்றுக் கொள்ள இயலாமல் போன விசயமென ஏதாவது இருப்பின் தயவு செய்து அதை இப்போது கற்றுக் கொள்வது என தீர்மானம் செய்து கொள்ளுங்கள். நீச்சல், பாட்டு, நடனம், இப்படி ஏதாவது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ’ஸ்னாப் டீல்’ விளம்பரத்துப் பாட்டி காலில் சலங்கை கட்டி ஆடினால் தான் ரசிப்போம்; நம் வீட்டில் பாட்டி ஆடினால் கேலி செய்வோம் என்று யாரெனும் குறுக்கிட்டால் சட்டை பண்ணாமல் முன்னேறிச் செல்லுங்கள். ஜப்பானில் 50 வயதில் னடனம் கற்றுக் கொண்டு இப்போது 80 லும் ஒரு பாட்டி நடனப் பள்ளியே நடத்திக் கொண்டிருக்கிறாராம். ஆகவே உங்களது மனப்பூர்வமான விருப்பங்களுக்கு இப்போதும் கூட தடை சொல்லிக் கொண்டிருப்பதில் நியாயமே இல்லை தானே!
டைரி எழுதுவதில் விருப்பமிருந்தால் அதைச் செய்யலாம், அல்லது மரபிலிருந்து அழிந்து போன வழக்கங்களில் ஒன்றாகி விட்ட கடிதம் எழுதும் பழக்கத்தை குழந்தைகளிடையே ஏற்படுத்துங்கள். நேர விரயமென்று நினைத்தால் சொல்வதற்கேதுமில்லை. ஏனெனில் சுவாரஸ்யம் தான் முக்கியம் எனில் இது கூட சுவாரஸ்யம் தானே! பொக்கிஷமாய் பழைய கடிதங்களைப் பாதுகாப்பவர்களுக்குத் தான் தெரியும் கடிதம் எழுதுவதில் இருக்கும் பேரின்பம்.
மாலை நேர நடை பயிற்சிக்கு ஒரு செட் சேர்த்துக் கொள்வதைப் போலவே ’விட்’ அடிக்கவும் ஒரு செட் சேர்த்துக் கொண்டு வாரமொரு முறையாவது ஒன்று கூடிச் சிரிக்க மறக்காதீர்கள். சென்னையில் ’லாஃபிங் கிளப் ’செயல்படுகிறதே அதை கிராமத்தின் ரிடையர்டு வாத்தியார்களும், குமாஸ்தாக்களும், ரிடையர்டு நிலச்சுவாந்தாரர்களும் கூட பின்பற்ற ஒரு தடையும் இல்லை. ஆகவே ’சிரிச்சாப் போச்சு ரவுண்ட்’ மாதிரி ஏதாவது செய்து சிரிக்க நேரம் ஒதுக்குங்கள்.
சில பெற்றோர்களின் மனக்கவலைகளில் ஒன்று பிள்ளைகளின் வருமானக் குறைவு. வருமானம் உயர வேண்டும் என்று நினைப்பது தவறில்லை, ஆனால் சதா சர்வ காலமும் வாழ்க்கையை வருமானம் மட்டுமே தீர்மானிப்பதில்லை, என்பதையும் உணர்ந்திருப்பவர்களாய் இருப்பது நல்லது. ஏனெனில் சில பெற்றோரிடையே ரிடையர்மெண்டுக்குப் பிறகு இந்தக் கவலை அதிகரிப்பதாக ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறது.

’புதுப் புது அர்த்தங்கள்’ படத்து பூர்ணம் விஸ்வநாதன், சவுகார் ஜானகி ஜோடியைப் போல அத்தனை சுவாரஸ்யமாய் வாழ்ந்து முடிக்கா விட்டாலும் கூட குறைந்த பட்சம் வாழ்வின் சின்னஞ்சிறு ஆசைகளையாவது மிஸ் பண்ணி விட வேண்டாமே!

’மிதுனம்’ என்றொரு தெலுங்குப் படம் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், லஷ்மியும் வயதான தம்பதிகளாக நடித்திருப்பார்கள். படத்தில் எஸ்.பி.பி தான் ரிடையர்டு ,லஷ்மி இல்லத்தரசியாகத் தான் இருந்திருப்பார், ஆனால் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்க இங்கு கணவரோடு தனித்திருக்கும் மனைவியாக அவருடையதும் ரிடையர்மெண்டுக்குப் பின்னான வாழ்க்கை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தை வயதான தம்பதிகளின் வாழ்வை சுவாரஸ்யம் குன்றாமல் இருக்கச் செய்ய மேலே சொல்லப்பட்ட அத்தனை விசயங்களும் நிறைக்கின்றன. ரிடையர்டு ஆன சீனியர் சிட்டிஸன்கள் மட்டும் அல்ல, அவர்களது வாரிசுகளும் பார்க்க வேண்டிய படமிது. வாய்ப்பிருந்தால் இணையத்தில் தேடிப் பார்க்கவும்.

மேலே சொன்ன விசயங்களைப் எப்படித் தொடங்குவது என்று சலிப்பிருந்தால் புகைப்படத்தில் சிறு பிள்ளை விளையாட்டாய் தென்னை மரப் பீப்பீ செய்து ஊதிக் கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ்!

வாழ்க்கை எப்போதும் அழகானதே!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024