Sunday, November 6, 2016

அனல் பறக்க பேசி எதிர்க் கட்சிகளை தெறிக்கவிட்ட தீப்பொறி ஆறுமுகம் !

மதுரை: மதுரையைச் சேர்ந்தவர் தீப்பொறி ஆறுமுகம். கடந்த தலைமுறையினருக்கு இந்த பெயர் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோருக்கு இணையாக பரிட்சையம்.

தனது அபரீதமான பேச்சாற்றலால் அதிமுக, திமுக தொண்டர்களை கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கட்டிப்போட்டவர் தீப்பொறி ஆறுமுகம். திமுக சார்பாக உதிர்த்த இவரது பொறி பறக்கும் பேச்சால்தான் இந்த அடைமொழி அவருக்கு கிடைத்தது. 1970களில் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து, நீண்ட காலமாக திமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார்.

கன்னிப்பேச்சு

பேச்சு மீதான ஆர்வத்தால் பள்ளி காலங்களில் பேச்சு போட்டிகளிலேயே பல பரிசுகளை வென்றுள்ளார்.


ஆரம்ப காலத்தில் பெரியார், அண்ணா பேச்சுக்கள் பிடித்து போனதால் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துகொண்டார். 19 வயதில் இருந்தே பேச ஆரம்பித்த ஆறுமுகம் பிறகு திமுகவில் இணைந்தார்.


எம்ஜிஆர் மீது விமர்சனம்

எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் தாக்கி இவரைப் போல கடுமையாக விமர்சித்தவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு சூடு பறக்கப் பேசியவர் தீப்பொறி ஆறுமுகம். இவரது கூட்டங்களுக்கு பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் வருவார்கள். அந்த அளவுக்கு இவரது பேச்சில் இரட்டை அர்த்தங்கள் அதிகம். பச்சை பச்சையாக பேசும் தீப்பொறி ஆறுமுகம், தான் கூட்டங்களில் பேசத் தொடங்குவதற்கு முன்பு பெண்களை போகச் சொல்லி விடுவார். அந்த அளவுக்கு அவரது பேச்சில் ஆபாச அனல் பறக்கும்.

அண்ணா கூட்டத்தில் பேச்சு

1967 தேர்தல்ல விழுப்புரம் தேர்தல் பிரசாரக் கூட்டத்துல பேசுறதுக்கு பேரறிஞர் அண்ணா வந்திருந்தார். இரவு இரண்டரை மணிக்கு அண்ணா வந்தார். ரெண்டு மணிநேரமா அவர் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் ஆறுமுகம் பேசிட்டு இருந்தார். அண்ணா வந்துட்டாருன்றதுக்காக அவரது பேச்சை நிறுத்தச் சொன்னாங்க. அப்போ அண்ணா அவர்கள் ஆறுமுகத்திடம் சைகையில் எனக்கு சோர்வா இருக்கு டீ குடித்துவிட்டு பேசுகிறேன் என்றார். தொடர்ந்து பேசிமுடித்தார் ஆறுமுகம்.

அண்ணா பேச்சில் உதிர்ந்த அடைமொழி:

கூட்டத்தில் ஒரு முறை அண்ணா பேசும்போது, 'ஆறுமுகம் பேச்சு தீப்பொறியாய் பறந்தது' என்று சொன்னார். இதையடுத்து விழுப்புரம் கண்டமங்கலம் பகுதியில் ஆறுமுகம் பேசப்போகும்போது அங்கிருந்த ஒன்றிய செயலாளர், 'தீப்பொறி' ஆறுமுகம் என்று அடைமொழி வைத்து போஸ்டர் ஒட்டினார். அது அப்படியே பல இடங்களில் தொடர ஆரம்பித்து இன்று வரை 'தீப்பொறி ஆறுமுகம்' என்ற பெயராகவே வலம் வருகிறார் ஆறுமுகம். அதுவே அவரின் மிகப்பெரும் அடையாளமாக மாறியது.

திமுக டூ அதிமுக

கடந்த 2001 ஆம் ஆண்டு கருணாநிதியிடம் மருத்துவ உதவி கேட்டு அது கிடைக்காமல்போனதால் விரக்தியில் இருந்த தீப்பொறியாரை, ரூ. 5 லட்சம் நிதியுதவி கொடுத்து அதிமுகவுக்கு இழுத்துக் கொண்டவர் ஜெயலலிதா. அதிமுகவில் தலைமைக்கழக பேச்சாளராக வலம் வந்த தீப்பொறி ஆறுமுகம், சில காலம் திமுகவினரை ஒரு பிடி பிடித்தார். பின்னர் 2010ல் மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டார் தீப்பொறி ஆறுமுகம்.

வரவேற்பும், எதிர்ப்பும்

இவரது பேச்சால் எரிச்சலுற்று எதிர்க்கட்சியினர் மேடையிலேயே கற்களை வீசிய சம்பவங்களும், ஜீப்பை விட்டு ஏற்றிய சம்பவங்களுமெல்லாம் நடந்துள்ளன. ஆனாலும் அச்சம் இன்றி அதிரடி, சரவெடியை கொளுத்திபோட இவர் தயங்கியது இல்லை. திமுகவில் இருக்கும் போது அதிமுகவை தாக்கி பேசுவதிலும், அதேபோல் அதிமுகவில் இருந்த போது கருணாநிதி பற்றியும் திமுக பற்றியும் விமர்சனம் செய்வதில் வள்ளவர் ஆறுமுகம்.

ஸ்டாலின் சந்திப்பு

மேடை பேச்சில் தனக்கென தனி முத்திரை பதித்த தீப்பொறி ஆறுமுகம் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ செலவுகளுக்கு அவர் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், அதுகுறித்து அறிந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீப்பொறி ஆறுமுகத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு முதல்கட்டமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி, மருத்துவ செலவீனங்களுக்கு வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் உடல் நலக் குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தீப்பொறி ஆறுமுகம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

Source: tamil.oneindia.com

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods