Tuesday, November 8, 2016

பற்களைக் காப்போம்!

By மா. ஆறுமுககண்ணன்  |   Published on : 08th November 2016 01:15 AM  |   
முத்துப்போன்ற பற்களை உடைய என் நண்பரை சில நாள்களுக்கு முன்பு சந்தித்தேன். பேசிக்கொண்டிருந்தபோது கடைவாயில் இரண்டு பற்கள் இல்லாதது தெரிந்தது. "என்னாயிற்று?' என்றேன். "பல் விழும் பலன்' என்றார். "பல்லி விழும் பலன் தெரியும், அதென்ன பல் விழும் பலன்?' என்றேன்.
"நெருங்கிய நண்பனுக்கு இருநூறு ரூபாய் கடன் கொடுத்து ஆறு மாசமாயிற்று. பார்க்கும்போதெல்லாம் கேட்பேன். நேற்றும் கேட்டேன். என்ன கோபத்திலிருந்தானோ கைநீட்டிவிட்டான். அதன்விளைவுதான் இந்தப் பல் விழுந்ததால் உண்டான பலன்' என்றார்.
"கோபம் வரவில்லையா' என்றேன். "கோபமில்லை. லாபம்தான் வந்தது' என்றார். "எப்படி?' என்றேன். "மூன்று பற்கள் ஏற்கெனவே ஆடிக்கொண்டிருந்தன. அதில்தான் இரண்டு விழுந்துவிட்டன. மருத்துவரிடம் சென்றிருந்தால் குறைந்தது அறுநூறாவது செலவாகியிருக்கும். இப்போது நானூறு லாபம்தானே' என்றார்.
"எனக்கு ஒரு நூறு ரூபாய் கடன் கிடைக்குமா' என்றேன். மனிதர் காற்றாய்ப் பறந்துவிட்டார். கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டது அவரது நாக்கு; ஆனால் பலன் கிடைத்ததோ பல்லுக்கு!
கை, கால் என எந்த உறுப்புகளில் வலி வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், பல்லில் வலி என்றால் அது பல்லுடன் நின்றுவிடுவதில்லை. கண், காது, கழுத்து, முகம், தலை என பல உறுப்புகளிலும் வலியை உண்டாக்கி பாடாய்ப்படுத்திவிடும்.
எனவே, பல்வேறு உறுப்புகளிலும் வலியைத் தரும் அதைப் "பல் - வலி' எனச் சொல்வது ஒருவகையில் பொருத்தம்தான்!
"பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. காலையில் எழுந்ததும் காலாற நடந்து சென்று, நீர்நிலைக் கரையோரங்களில் நின்றிருக்கும் வேம்பிலிருந்தோ, ஆலிலிருந்தோ சிறு குச்சியை உடைத்து பல்துலக்கி வளர்ந்தவர்கள் தமிழர்கள். அந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் "ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்னும் பழமொழி.
நாளடைவில், நீர்நிலைகளும் சுருங்கி, வீட்டிலேயே பற்களைத் துலக்கும் பழக்கம் வந்துவிட்டது. அதனை பற்பசை நிறுவனங்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சில நிறுவனங்களின் ஒரே மாதிரியான பற்பசை மட்டுமே விற்பனைக்கு வந்தன. இப்போதோ ஒவ்வொரு நிறுவனமும் விதவிதமான பற்பசைகளை விற்பனை செய்கின்றன. ஒவ்வொரு விளம்பரத்திலும் "இதுதான் சிறந்தது; மற்றவையெல்லாம் சரியல்ல' என்பதுபோல கூறப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் மற்ற நிறுவனத்தைக் குறைகூறுகின்றனரா, அல்லது தங்களது நிறுவனத்தின் மற்ற பற்பசைகளையே குறைகூறுகின்றனரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்!
உங்க பற்பசையில் உப்பு இருக்கிறதா என அக்கறையுடன் வினவுகிறது ஒரு விளம்பரம். உப்புள்ள பற்பசைதான் பல்லுக்கு நன்மை செய்யும் போலிருக்கிறதே என நினைத்து உடனே சென்று வாங்கிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தால், வேம்பு இருக்கிறதா உங்கள் பற்பசையில் என்கிறது அதே நிறுவனத்தின் வேறொரு விளம்பரம்.
சரி, உப்புள்ள பற்பசையை விட்டுவிட்டு வேம்புள்ள பற்பசையை வாங்கிக்கொண்டு வேகமாக வீடு வந்தால், கிராம்பு இல்லையா உங்கள் பற்பசையில் என்று கேட்கிறது மற்றொரு விளம்பரம். நமக்குத்தான் கிறுகிறுத்துப்போய்விடுகிறது!
நாம் பயன்படுத்தும் பற்பசை எத்தகைய பொருள்களால் தயாரிக்கப்பட்டது என்பதை பற்பசை டியூபின் அடிப்புறத்திலிருக்கும் சிறிய கோடுகள் மூலம் அறியலாம்.
நீல வண்ணக் கோடு இருந்தால் இயற்கைப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பொருள்களாலும், சிவப்பு வண்ணக் கோடு இருந்தால் இயற்கை மற்றும் வேதிப்பொருள்களாலும், கருப்பு வண்ணக் கோடு இருந்தால் முழுவதும் வேதிப்பொருளாலும் தயாரிக்கப்பட்டது எனத் தெரிந்துகொள்ளலாம்.
பல்லில் சொத்தை, பற்சிதைவு, காரை படிதல் போன்ற பிரச்னைகளால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று.
சிறுவர்களுக்கு ஏற்படும் பல்நோய்க்கு காரணங்களாக பிள்ளைகளுக்கு முறையாக பல் துலக்கக் கற்றுக்கொடுக்காதது, காலையிலேயே பள்ளிக்குப் புறப்பட வேண்டியிருப்பதால் அவசர அவசரமாக பல் துலக்குதல், இரவில் உறங்கச் செல்லும் முன் பல் துலக்காதது போன்ற காரணங்களைக் கூறுகிறது அந்த அறிக்கை.
பல்வேறு வேதிப்பொருள்கள் சேர்க்கப்பட்ட துரித உணவுகளை அடிக்கடியும் அதிகமாகவும் உள்கொள்வதும் இப்பிரச்னைக்குக் காரணமாம்.
பற்களில் சின்னதாய் கருப்புப் புள்ளிகள் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. பணத்தில் மட்டுமல்ல, பல்லிலும் கருப்பு ஆகாது.
பல் சொத்தையால் வலி ஏற்படும்போது சிலர் பொடி, புகையிலை என கைக்குக் கிடைத்தவற்றை வைக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். இது நாளடைவில் புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கிவிடும்.
இதேபோல, பற்களில் நீண்டகாலமாக இருக்கும் பல்சொத்தையால் நெஞ்சுவலி வரும் அபாயம் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
கண், காது, இதயம் என மனித உடலின் அனைத்து உறுப்புகளையும் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் படைத்த இயற்கை, பற்களை மட்டும் முப்பத்திரண்டு என படைத்ததால்தானோ என்னவோ அதைப் பேணிக் காக்க பொதுவாக யாரும் அதிக அக்கறை செலுத்துவதில்லை.
ஒன்றிரண்டு போனாலும் இருப்பதை வைத்து சரிக்கட்டிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாகவே போனாலும் கட்டிக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
என்னதான் செயற்கை என்றாலும் அது இயற்கையைப்போல வராது. இருக்கின்ற ஒவ்வொரு பல்லையும் முறையாகப் பராமரித்து, வசீகரப் புன்னகையுடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods