Tuesday, November 8, 2016

அரசே செய்தாலென்ன?

By எம். அருண்குமார்  |   Published on : 07th November 2016 02:06 AM  |   
திருமணமாகி குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். முறையான சிகிச்சை பெற்றால் குழந்தைப் பேறு கண்டிப்பாக கிடைக்கும்.
குழந்தைப் பேறு இல்லாதவர்களைக் குறிவைத்து செயற்கை முறையில் கருத்தரித்தல், ஆலோசனை, டெஸ்ட் டியூப் பேபி என பல ஆலோசனை மையங்கள் தனியார் மருத்துவமனைகளில் துவக்கப்பட்டு சிகிச்சை என்ற பெயரில் பல கோடி ரூபாய் பணத்தை வருவாயாக அந்த மருத்துவமனைகள் ஈட்டுகின்றன.
குழந்தைப் பேறு சிகிச்சைக்காக செல்பவர்கள் செய்யும் செலவுக்கு அளவே இல்லை. அந்த அளவுக்கு மருத்துவமனைகள் கட்டணத்தை வசூலிக்கின்றன. பரிசோதனைக்காகவே அதிக அளவு பணம் வசூலிக்கப்படுகிறது.
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில், ஒரே சிகிச்சையிலேயே வெற்றி பெற்று கருத்தரிப்பு நடந்துவிடும் என்று கூறிவிடமுடியாது. பெரும்பாலானவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று சிகிச்சைகளுக்கு பிறகே கருத்தரிப்பு நடைபெறுகிறது.
இதற்காக பல லட்சங்களை செலவழிக்க வேண்டியது. கருத்தரிப்பு வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென்பதற்காக வெகு தூரத்திலிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்கள் கருத்தரிக்க வேண்டிய பெண்ணின் நலனை கருதி காரில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.
செயற்கை முறையில் கருதரிப்பு சிகிச்சைக்கு செல்லும் தம்பதிக்கு பல கட்டுப்பாடுகளை தனியார் மருத்துவமனைகள் விதிக்கின்றன. அந்த மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும். அங்கேயே அனைத்து பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாளில், கட்டாயமாக சிகிச்சைக்கு வந்தே ஆக வேண்டும், இல்லையெனில் கருத்தரிப்பு நிகழாது என அச்சத்தை உருவாக்குகின்றனர்.
வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த சிகிச்சையை பெற முடிகின்றது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அந்த மருத்துவமனைக்கு ஆலோசனைக்குகூட செல்ல முடியவில்லை.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தமிழகத்தில் லட்சக் கணக்கானவர்கள் உள்ளனர். அதில் வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் வசதியில்லாத ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாதபடி அவர்களுடைய பொருளாதாரச் சூழ்நிலை உள்ளது.
இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு மாறிவரும் இச்சூழ்நிலையில் செயற்கை கருத்தரிப்புக்காக தனியார் மருத்துவமனைகளை மட்டுமே மக்கள் நம்பியிருக்க வேண்டுமா? தனியார் மருத்துவமனைகளுக்கு சமமாக அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள், உபகரணங்களுக்காக அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும் அதன் பலன் முறையாக மக்களை சென்றடைவதில்லை.
தமிழக அரசு மக்களின் நலனை கருதி பல்வேறு விலையில்லா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கி வரும் நிலையில் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு
குழந்தைப் பேறு வழங்கும் செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சையினை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வழங்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையினை வழங்கும் சிறப்பு திட்டத்தை துவங்கி செயல்படுத்த வேண்டும். இதற்கென தனியாக சிறப்பு பிரிவையும் அரசு மருத்துவமனைகளில் தொடங்க வேண்டும். அந்த செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை பிரிவில் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை சாதாரண சிகிச்சை போல வழங்காமல் தனியார் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையை காட்டிலும் தரமானதாக வழங்கி செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையை வெற்றிகரமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் முதல் கட்டமாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை சிறப்பு பிரிவை துவக்கி செயல்படுத்த வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக தாலுகா மருத்துவமனைகளில் அச்சிறப்பு சிகிச்சை பிரிவை துவக்கி தரமான சிகிச்சையினை வழங்க வேண்டும். அந்த சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு தரமான மருந்துகளையே வழங்க வேண்டும்.
இதன் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குழந்தையில்லா தம்பதிகள் பயனடைவார்கள் என்பது உறுதி.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods