வங்கி டெபாசிட் ரூ. 2.5 லட்சத்தை தாண்டினால் நடவடிக்கை: பான் கார்டு அவசியமாகிறது
வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் டிசம்பர் 30-ம் தேதி வரை போடப்படும் தொகை ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகை செலுத்துவோர் பான் கார்டு விபரத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பலரும் ரூ. 49 ஆயிரத்தை பல முறை தங்கள் வங்கிக் கணக்கில் போட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில் நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையான காலத்தில் ஒரு கணக்கில் போடப்படும் தொகை ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாயிருந் தால் அது வரி விதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்றார்போல மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் ஆண்டு வருவாய் கணக்கு தாக்கல் விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டில் ஒரு தனிநபர் தங்கள் கணக்கில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தால் அது குறித்த தகவலை தங்களுக்கு தெரிவிக்குமாறு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு வரி விதிப்பு ஆணையம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வரம்பை ரூ. 2.5 லட்சமாகக் குறைத்துள்ளது.
நடப்புக் கணக்குகளில் நவம்பர் 9 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையில் போடப்பட்ட தொகையின் அளவு ரூ. 12. 50 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு வரி விதிப்பு ஆணையம் கூறியுள்ளது.
இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் தபால் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்றாலும், ஒருவரே பல வங்கிகளில் கணக்கு வைத்து அதை செயல்படுத்தினால் அது எவ்விதம் ஒருங்கிணைக்கப்படும் என்ற தகவல் தெரியவில்லை.
No comments:
Post a Comment