Thursday, November 17, 2016

இவர்களும்தான் பணத்தை ஒழித்தார்கள்.. ஆனால் கடைசியில் என்னாச்சு தெரியுமா?
oneindia tamil

டெல்லி: பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் ஒழிப்பை பலரும் சிலாகித்துப் பேசுகிறார்கள். ஆனால் சாமானிய பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் அடிப்படைத் தேவைக்காக தெருத் தெருவாக அலைந்து கொண்டுள்ளனர். மோடியைப் போலவே மேலும் பல நாடுகளிலும் கூட பண ஒழிப்பு நடந்தது. ஆனால் எதுவுமே எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதுதான் முக்கியமானது.

உண்மையில் அந்த நாடுகளில் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை, அந்த அரசுகளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கருப்புப் பணத்தை முடக்க அல்லது அழிக்கப் போய் தற்போது பெரும்பான்மையான மக்களின் தவிப்பை வேடிக்கை பார்த்து வருகிறது மத்திய அரசு.

மத்திய அரசின் திட்டமும், நோக்கமும் மிக நல்ல விஷயம்தான் என்றாலும் கூட முறையான திட்டமிடல் இல்லை. குறிப்பாக வங்கிகள் மகா மோசமான திட்டமிடலை மேற்கொண்டதால்தான் இந்தப் பெரும் குழப்பம். இதையெல்லாம் முன்கூட்டியே சரி செய்திருக்க வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை. அதுவும் கூட வாயைப் பொத்திக் கொண்டுதான் உள்ளது.

இதற்கு முன்பு பல நாடுகளிலும் இதுபோல அதிரடியாக பெரிய மதிப்பிலான பணத்தை ஒழித்துப் பார்த்தனர். ஆனால் அங்கு தோல்வியிலேயே அந்த நடவடிக்கைகள் முடிந்துள்ளன. அதுகுறித்த ஒரு ரவுண்டப்...

Source: tamil.oneindia.com

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன் அப்போது வெடித்துச் சிதறக் காத்திருந்த நேரம். கார்பசேவ் அதிபராக இருந்தார். ஆண்டு 1991. அந்த ஆண்டு ஜனவரி மாதம் உயரிய மதிப்பிலான ரூபிளை திரும்பப் பெறுவதாக திடீரென அறிவித்தார் கார்பசேவ். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இதை அறிவித்தார் கார்பசேவ். 50 மற்றும் 100 ரூபிள் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் கார்பசேவ்.

நடந்தது என்ன?

ஆனால் இந்த ரூபிள் ஒழிப்பால் எதிர்பார்த்த விளைவு கிடைக்கவில்லை. பணவீக்கம் சற்றும் குறையவில்லை. மாறாக மக்கள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களிடையே பெரும் கொந்தளிப்பும், போராட்டங்களும் வெடித்தன. பொருளாதாரம் மேலும் சீர்குலைந்தது. இது கார்பசேவின் பதவியை குறி வைத்த புரட்சிக்கும் வித்திட்டது. அடுத்த ஆண்டே சோவியத் யூனியன் சிதறியது.

வட கொரியா

2010ம் ஆண்டு வட கொரியாவின் மறைந்த சர்வாதிகாரி கிம் ஜோங் 2 இதேபோன்ற கரன்சி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் அது பெரும் விபரீதத்திற்கே விட்டது. நாடே பஞ்சத்தில் மூழ்கியது. சாப்பிடக் கூட எதுவும் இல்லாமல் மக்கள் செத்து விழுந்தனர். மிகப் பெரிய விலை உயர்வையும் நாடு சந்தித்தது. இதை சற்றும் எதிர்பாராத கிம், மக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அசரடித்தார். அதேசமயம், இந்த சீர்திருத்தத்திற்கு யோசனை கூறிய நிதித்துறை அமைச்சரை தலையைத் துண்டித்துக் கொலை செய்து கிம் அதிரவும் வைத்தார்.

ஜயர்

ஜயர் நாடு 1990களில் பெரும் பொருளாதார சீர்குலைவுகளைச் சந்தித்தது. இதையடுத்து சர்வாதிகாரி மொபுடு செசே சீக்கோ கரன்சிகளில் சீர்திருத்தங்களை அறிவித்தார். 1993ம் ஆண்டு சில கரன்சிகளை அவர் புழக்கத்திலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டார். அது பெரும் பண வீக்கத்திற்கு இட்டுச் சென்றது. டாலருக்கு எதிரான ஜயர் நாட்டு கரன்சியின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது. உள்நாட்டுப் போர் வெடித்தது. 1997ல் மொபுடு ஆட்சியை விட்டுத் துரத்தப்பட்டார்.

நைஜீரியா

நைஜீரியாவில் 1984ம் ஆண்டு ராணுவ சர்வாதிகாரி முகம்மது புஹாரி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தார். புதிய ரூபாய் நோட்டுக்களை அவர் வெளியிட்டார். புதிய நிறத்துடன் வந்த அந்த ரூபாய் நோட்டுக்களால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தையே அது சீர்குலைத்து விட்டது. பின்னர் வந்த புரட்சியில் புஹாரி வெளியேற்றப்பட்டார்.

மியான்மர்

1987ம் ஆண்டு மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் புழக்கத்தில் இருந்த பணத்தில் 80 சதவீத மதிப்பை குறைத்து அறிவித்தனர். கருப்புப் பண ஒழிப்பை குறி வைத்தே இந்த நடவடிக்கை. ஆனால் அது அப்பாவி மக்களைத்தான் கடுமையாக பாதித்தது. போராட்டங்கள் வெடித்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

கானா

ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் 1982ம் ஆண்டு 50 செடி கரன்சி ஒழிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் சீர் குலைந்தன. மக்களுக்கு வங்கிகள் மீது இருந்த நம்பிக்கை தகர்ந்தது. நாடே ஸ்தம்பித்தது. கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பல மைல் தூரம் நடந்து வந்து வங்கிகளில் பணத்தை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்ற முடியாமல் பல கோடிப் பணம் வீணாக மூட்டை மூட்டையாக வீசப்பட்டது.

திட்டமில் இல்லாவிட்டால் தோல்விதான்

சரியான திட்டமிடல் இல்லாததால் வந்த வினைதான் இந்த நாடுகளில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம். இந்தியாவிலும் கூட தற்போது முறையான திட்டமிடல் இல்லாமல்தான் பெரும் குழப்பமாக உள்ளது. எனவே மோடியின் நடவடிக்கை எந்த அளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்யத்தான் இந்த நடவடிக்கை என்று அரசு சொல்லுமேயேனால் இந்தத் திட்டத்தை தோல்வி என்று இப்போதே கூறி விடலாம்.. காரணம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மக்கள்தான்.. கருப்புப் பண முதலைகளோ அல்லது பெரும் பணக்காரர்களோ அல்ல!

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024