Tuesday, December 6, 2016

ஜெயலலிதா நேசித்த 5 பெண்கள்! #jayalalithaa

ஜெயலலிதா

ஒரு பெண்ணின் எல்லைகள் இவைதான் என வகுத்திருந்தவற்றைத் தகர்த்தெறிந்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா. அவரின் மறைவுக்குக் கட்சி பேதமின்றிப் பலரும் கண்ணீர் சிந்துவதற்கு முக்கியக் காரணம், Ôஒரு பெண்ணான நாம் இதைச் செய்யலாமா?Õ என்று எந்த இடத்திலும் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன் ஆளுமையை வளர்த்துக்கொண்டு நிகரில்லாத தலைமையாக விளங்கியதே! பல தலைவர்களோடு கைகோத்து தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி, தோல்விகளைப் பார்த்தவர். எப்போதும் தன் ஆளுமையைச் சரித்துக் கொள்ளாதவர்.
இத்தகைய பண்புகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா, தன் வாழ்க்கையில் நேசித்த பெண்களில் ஐந்து பேர் முக்கியமானவர்கள்.



அன்னை சந்தியா:
தன்னுடைய சிறுவயதிலேயே அப்பாவை இழந்த ஜெயலலிதாவுக்கு அம்மாவாக மட்டுமல்லாமல் சிறந்த தோழியாகவும் இருந்தவர் சந்தியா. ஜெயலலிதாவின் ஒவ்வோர் அசைவையும் அன்போடு கவனித்து வழிநடத்தியவர். அதேபோல, அம்மாவின் அரவணைப்பை எப்போதும் விரும்பும் பெண்ணாக இருந்தார் ஜெயலலிதா. சென்னை, சர்ச் பார்க் கான்வென்ட்டில் தான் படிக்க வந்ததைப் பற்றி குறிப்பிடும்போது, “பல ஆண்டுகள் அம்மாவைப் பிரிந்து பெங்களூரில் இருந்த எனக்கு, சென்னையில் அம்மாவுடன் இருந்து படிக்கும் வாய்ப்பாக அமைந்தது” என உற்சாகமானார்.
ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டுமானால், என்ன உடை உடுத்திச் செல்வது என்பதில்கூட அம்மாதான் உதவ வேண்டும். பள்ளிக்குச் செல்லும்போது அடம்பிடித்தவர், பின்னாளில் நடிக்கச் செல்லும்போது, இன்றைக்கு லீவு போட்டுவிடவா என அடம்பிடிப்பாராம். அப்போதும் செல்லக் கோபத்துடன் கடிந்துகொண்டு, அனுப்பி வைப்பது அம்மாதான். பள்ளிக்கோ, நடிக்கவோ எங்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினாலும், வீட்டில் இருந்து அம்மா வரவேற்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பராம் ஜெயலலிதா. இவரின் மனதை நன்கறிந்த அம்மா, தான் வெளியே எங்கு சென்றிருந்தாலும் ஜெயலலிதா வீட்டுக்கு வரும் நேரத்துக்குத் தவறாமல் ஆஜராகிவிடுவார்.

ஜெயலலிதாவிடம் அவர் மிகவும் கடுமையாக நடந்துகொண்ட ஒரே விஷயம், பரதநாட்டியம் பழகுவதற்குத்தான். நாட்டியம் கற்றுக்கொடுக்க வரும் குருவிடம், தலை வலிக்கிறது... வயிறு வலிக்கிறது... என ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அனுப்பிவிடுவார். இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிந்ததும் கண்டிப்போடு, உனக்கு என்னவானாலும் சரி, பரதநாட்டிய வகுப்புக்குச் சென்றே ஆகவேண்டும் என வற்புறுத்துவாராம். அந்த நடனம்தான் சினிமா வாழ்க்கைக்கு கை கொடுத்தது என்பார் ஜெயலலிதா. ‘பத்திரிகைகளில் வரும் எதிர்மறைச் செய்திகளைத் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதே’ என்று ஆறுதல்படுத்திய அம்மாவையே தன்னுடைய குரு, சிநேகிதி, வழிகாட்டி என்பார் ஜெயலலிதா.



கேத்ரின் சைமன்:
ஜெயலலிதாவின் ஆங்கிலத் திறன் எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியது. சின்ன இடறல் கூட இல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுவார் என்பதற்கு மாநிலங்களவையில் அவர் நிகழ்த்திய பேச்சுக்களே உதாரணம். ஜெயலலிதாவின் இநந்த் திறமைக்கு, அவரின் ஆசிரியர்களே காரணம். அவர்களில் முதன்மையானவர், கேத்ரின் சைமன். சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் ஜெயலலிதா படிக்கும்போது, அவரிடம் அன்புகொண்டு தனிக்கவனம் எடுத்துக்கொண்டவர். மாணவர்களோடு நட்புறவுடன் பழகி, அவர்களைப் பண்படுத்தும் குணம்கொண்டவர் கேத்ரின் சைமன். சில மாதங்களுக்கு முன் கேத்ரின் இறந்தபோது, ‘தன் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என் ஆசிரியர்’ என நெகிழ்வோடு குறிப்பிட்டார் ஜெயலலிதா.



இந்திராகாந்தி:
1984-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்திலும், சக எம்.பி-க்களிடம் இந்தியிலும் பேசி அசரவைத்தார். இந்த மொழியாற்றல் இந்திரா காந்தியின் நட்பு கிடைக்க வழிசெய்தது. இயல்பாகவே இந்திரா காந்தியின் மீது ஈர்ப்பும் பிரமிப்பும் உள்ள ஜெயலலிதா, இந்திரா காந்தியுடன் நெருக்கமானார். அது எந்தளவுக்கு என்றால், ஜெயலலிதா, தனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது, “அம்மா... எனத் தொடங்கித் தன் நிலையை விளக்கி, உதவுமாறு கடிதம் எழுதியபோது... இந்திரா காந்தி, டெல்லியிலிருந்து தனக்கு நம்பிக்கையானவர்களை அனுப்பி ஆறுதலும் உதவியும் செய்யவைத்தார். நம்பிக்கை தரும் இளம் அரசியல் தலைவர் என ஜெயலலிதா மீது இந்திரா காந்திக்கும் அன்பு இருந்தது. அதனால்தான் யூகோஸ்லேவியா நாட்டு அதிபருக்குத் தரப்பட்ட விருந்துக்கு ஜெயலலிதாவை அழைத்திருந்தார். அந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 16 பேர்தான் எனும்போதே, இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். ஒவ்வொரு நாட்டு அதிபரிடமும் ஜெயலலிதாவை அறிமுகம் செய்துவைத்தார் இந்திரா காந்தி. தன் அரசியல் வாழ்வைப் பிரகாசிக்கவைக்கப் பெரிதும் உதவுவார் என நம்பிக்கையோடு இருந்த ஜெயலலிதாவுக்கு இந்திரா காந்தியின் படுகொலை பெரும் இடியாக விழுந்தது.



மனோரமா:
‘ஆச்சி’ என்று திரை உலகினரால் அன்போடு அழைக்கப்பட்ட மனோரமாவும் ஜெயலலிதாவும் திரைப்படங்களில் நடிக்கும்போதிருந்தே நல்ல தோழிகள். பல திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் நட்பு இன்னும் வலுப்பட்டது. தனிப்பட்ட வாழ்வில் ஏற்றம், சரிவு ஏற்படும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபிறகு, மனோரமா அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். மனோரமா இறந்தபோது, ஜெயலலிதா சிறுதாவூரில் இருந்தார். பரபரப்பான அரசியல் சூழல்நிலவிய நேரம் அது. ஆனாலும் அங்கிருந்து வந்து அஞ்சலி செலுத்தினார். ‘தன் அம்மாவுக்குப் பிறகு, தன்னை Ôஅம்முÕ என பாசத்தோடு அழைக்கும் மனோரமா, தனக்கு மூத்த சகோதரி என நினைவுகூர்ந்தார்.



சசிகலா:
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாகக் கருதப்படுவர் சசிகலா. தமிழ்நாடு அரசின் செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசனின் மனைவி. வீடியோ கேசட் வாடகைக்கு விடும் கடையை நடத்தி வந்தவர். ஜெயலலிதா அறிமுகமான சிறிது காலத்திலேயே அவரின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தார். பின்னாட்களில் போயஸ் கார்டனிலேயே குடியேறும் அளவுக்கு இவரின் நட்பு வளர்ந்தது. இவரின் சகோதரி மகன் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து பிரமாண்ட திருமணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவின் நிழலாக தொடரும் அளவுக்கு அவரின் நம்பிக்கையைப் பெற்றவர். வெற்றியிலும் தோல்வியிலும் கூடவே இருக்கும் இவர்களின் நட்பில், சில நேரங்களில் உரசல்கள் வந்தபோதிலும், இன்று, ஜெயலலிதாவின் உடல் அருகே கலங்கி நிற்கும் வரை உடன் இருப்பவர்

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024