இவற்றைச் செய்யும் துணிச்சல் ஜெயலலிதாவிடம் மட்டுமே இருந்தது!
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இணைந்தபோது, தமிழக அரசியலில் பெண்கள் என்ற பதமே பெரிய அளவில் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதது. அ.தி.மு.க-வில் நுழைந்து, தமிழக அரசியலில் வலிமை மிகுந்த முதல்பெண் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றார். சினிமாவில், அரசியலில், ஆட்சிப் பதவியில் என பல துறைகளிலும் முன்னோடியாக இருந்த 'முதல் பெண்' என்ற எண்ணற்ற சாதனைகளைத் தக்க வைத்துக் கொண்டவர்.
தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ஜெயலலிதா, நடிகையாக இருந்த காலத்திலேயே பன்மொழிப் புலமையைப் பெற்றிருந்தார். அந்தக் காலத்திலே சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய ஒரே சினிமா நடிகையாக ஜெயலலிதா திகழ்ந்தார். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து 1989-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றி பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, 27 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டமன்றத்துக்குள் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவராக நுழைந்தார். ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான சில மாதங்களில், அ.தி.மு.க ஒன்றிணைந்தது. அப்போது முதல் அ.தி.மு.கவை வழி நடத்தி வரும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசு தான்தான் என்பதை தொண்டர்கள் மூலம் நிரூபித்தார்.
1991-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. தமிழகத்தில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலகட்டத்தில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான 'தொட்டில் குழந்தை திட்டம்', அனைத்து மகளிர் காவல்நிலையம், காவல்துறையில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீத ஒதுக்கீடு என இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், பெண்களுக்கான மாபெரும் திட்டங்களையும் ஜெயலலிதா தொடங்கி வைத்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார்.
கடந்த 30 வருடங்களாக இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகத் திகழ்ந்த ஜெயலலிதா, தென் இந்தியாவின் வலிமை மிகுந்த பெண்களில் ஒருவராக விளங்கினார். கோடிக்கணக்கானத் தொண்டர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அ.தி.மு.க என்னும் மிகப்பெரிய கட்சியின் பொதுச் செயலாளராக 26 வருடங்களுக்கும்மேல் இருந்துள்ளார். ஜெயலலிதாவின் ஆளுமை, கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல், அனைத்து 39 தொகுதிகளிலும் தனித்து நின்று, அ.தி.மு.க 37 மக்களவைத் தொகுதியைக் கைப்பற்றியது. தமிழக நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில், முதல் முறையாகும்.
37 தொகுதிகளை அ.தி.மு.க பிடிப்பதற்கு, ஜெயலலிதாவின் மக்களைக் கவரும், தேர்தல் பிரசாரம் மிகவும் முக்கியக் காரணமாக அமைந்தது. அதன் பின்னர் 2016-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், அனைத்து 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில், அ.தி.மு.க-வை முதல்முறையாக களமிறங்கச் செய்து, தனித்து நின்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது, ஜெயலலிதாவின் அரசியல் சாதுர்யத்திற்கு மிகப்பெரும் சான்றாகத் திகழ்கிறது.
32 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியில் இருந்த ஒரு கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்த பெருமையை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க பெற்று மேலும் சாதனையைப் படைத்தது.
எண்ணற்ற சாதனைகளை தன்னகத்தே கொண்டுத் திகழ்ந்த, சாமான்ய மக்களும், சாதாரண தொண்டனும் அ.தி.மு.க-வில் எந்தநிலையையும் எட்டவைத்து, அவர்களுக்கான பதவி அங்கீகாரத்தை அளித்த சாதனை மிக்கத் தலைவி முதல்வர் ஜெயலலிதா. இத்தகைய பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, லட்சக்கணக்கான பெண்களுக்கு அரசியல் முன்னோடியாக விளங்கிய ஜெயலலிதா என்றும் மகத்தான மாண்புமிக்க தலைவர் இன்று கோடிக்கணக்கான தொண்டர்களையும், தமிழக மக்களையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு, இப்பூவுலக வாழ்வில் இருந்து மீண்டு விட்டார்!
No comments:
Post a Comment