வழி தெரியாத ஓட்டுனர்கள் நொந்து நூலான பயணிகள்
பதிவு செய்த நாள்: மே 15,2017 23:23
சென்னை: பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், 90 சதவீதம் பஸ்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்காலிக பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங் களை இயக்கிய ஓட்டுனர்களை கொண்டு, பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆத்திரம் : இதனால், பொது மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். குறிப்பாக, வழித்தட அனுபவம் இல்லாத ஓட்டுனர்கள், பல இடங்களை சுற்றி அழைத்து சென்றனர். அரசு பஸ்களின் நிலைமை தெரியாமல் வேகமாக இயக்கி, சிறு சிறு விபத்துகளும் நடந்தன. ஆத்திரம்அடைந்த கிராமத்தினர், பஸ்கள் மீது கல் வீசி, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், 'அண்ணா தொழிற்சங்கத்தினரை பயன்படுத்தி, பஸ்களை இயக்குவோம்; பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர் எச்சரித்தார்.
அதனால், கோபம்அடைந்த தொழிற்சங்கத்தினர், ஆங்காங்கே கல் வீச்சு சம்பவங்களை நடத்தினர். இதனால், பாதிக்கப்பட்ட பொது மக்கள், அரசின் நிலைப்பாட்டை விமர்சிக்க துவங்கி உள்ளனர்.
தற்காலிக தீர்வு : அவர்கள் கூறியதாவது:அரசு துறையில் ஏற்படும் குழப்பங்களை, அவ்வப்போது களையாமல், அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டியதால் தான், 'ஸ்டிரைக்' நடப்பதாக தெரிகிறது. தற்போதும், தற்காலிக ஊழியர்களை பணியமர்த்துவது, அமைச்சர்களை ஏவி, பஸ்களை இயக்க வலியுறுத்துவது போன்ற தற்காலிக தீர்வை நோக்கி தான் அரசு நகர்கிறது.
இதனால், தொழிலாளர்களின் போராட்ட குணம் வலுப்படுவதோடு, பஸ் இயக்கத்தை தடுக்கும் எதிர் மனநிலைக்கு தான் தள்ளப்படுவர். இதனால், பொது மக்கள் பாதிக்கப்படுவதோடு, குழப்பமும் அதிகரிக்கும். அரசு, இது போன்ற செயல்களில் ஈடுபடாமல், அரசு தொழிலாளர்களை அழைத்து, சுமுகமாக பேசி, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment