Tuesday, May 16, 2017

Court news

35 ஆண்டுகள் பணிபுரிந்த பின் பணி வரன்முறைக்கு உத்தரவு

பதிவு செய்த நாள்: மே 15,2017 22:15

மதுரை: கோவில்பட்டி அரசு பள்ளி வாட்ச்மேனை, 35 ஆண்டுகளுக்கு முன், நியமிக்கப்பட்ட தேதியில் இருந்து பணி வரன்முறை செய்ய பரிசீலிக்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டி முனிய சாமி தாக்கல் செய்த மனு: துாத்துக்குடி மாவட்டம், புதுார் அரசு மேல்நிலை பள்ளியில், 1982 ஜன., 7ல், தொகுப்பூதிய அடிப்படையில், நீர் வழங்குபவராக, வேலை வாய்ப்பகத்தின் பரிந்துரை அடிப்படையில், நியமிக்கப்பட்டேன்.என்னுடன் வேலையில் சேர்ந்த சிலரை, பணி வரன்முறை செய்தனர். எனக்கு காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க, அரசுக்கு, உயர் நீதிமன்ற கிளை, 2008ல், உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால், 2009ல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தேன். கோவில்பட்டி, வ.உ.சி., அரசு ஆண்கள் மேல்நிலையில் இரவுக் காவலராக, காலமுறை ஊதியம் அடிப்படையில், அதே கல்வி மாவட்ட அலுவலர் நியமித்தார். ஆனால், என் பணி வரன்முறை படுத்தப்படவில்லை. கடந்த, 1982ல் வேலையில் சேர்ந்தது முதல், பணி வரன்முறை செய்து, அதற்குரிய அனைத்து பண பலன்களையும் வழங்க கோரி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குனர், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு முனியசாமி மனு செய்திருந்தார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ''மனுவை, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர், அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். பணி வரன்முறை செய்ய, அரசு பரிசீலிக்க வேண்டும்.
''அதன் அடிப்படையில், பணப் பலன்களை வழங்க முடிவு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

news today 15.01.2025