Tuesday, June 27, 2017

வேலை கிடைத்தும் அங்கீகாரம் இல்லை : கேரளாவில் திருநங்கையர் வேதனை
பதிவு செய்த நாள்27ஜூன்
2017
01:29

கொச்சி: கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தில், வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில், எட்டு திருநங்கையர், தங்கள் வேலைகளை ராஜினாமா செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் கொச்சி நகரில், சமீபத்தில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில், டிக்கெட் விற்பனை, துாய்மை செய்யும் பணி போன்றவற்றில், 21 திருநங்கையர் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், வேலையில் சேர்ந்த ஒரே வாரத்தில், இவர்களில் எட்டு பேர், தங்கள் வேலைகளை ராஜினாமா செய்துள்ளனர். அடிப்படை வசதிகள் கிடைக்காதது, சமுதாயத்தில் உரிய அங்கீகாரம் இல்லாததே, தங்கள் ராஜினாமாவுக்கு காரணம் என, தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, திருநங்கை ராக ரஞ்ஜினி கூறியதாவது: முதுகலை பட்டம் படித்துள்ள எனக்கு, மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். இங்கு எனக்கு, மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நான் எங்கு தேடியும், தங்குவதற்கு வாடகைக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை. கவுரவ மான வேலை இருந்தும், திருநங்கை என்ற காரணத்திற்காக, எனக்கு வீடு தர யாரும் முன்வரவில்லை. ஒரு வாரமாக, தனியார் லாட்ஜில், தினசரி வாடகைக்கு தங்கியிருந்தேன். ஒரு நாள் வாடகையாக, 600 ரூபாய் கட்ட வேண்டியிருந்தது. இதே நிலை தொடர்ந்தால், நான் வாங்கும் மாத சம்பளத்தை விட, கூடுதலாக, லாட்ஜ் வாடகை தர வேண்டியிருக்கும். இதுகுறித்து, மாநகர மேயர், மாவட்ட கலெக்டர் என அனைத்து அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளித்தேன். எந்த தரப்பிலிருந்தும் என் மனுவுக்கு பதில் வரவில்லை. எனவே, என் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றிய மேலும் சில திருநங்கையர், தங்கள் தரப்பு பிரச்னைகளை, அதிகாரிகளிடம் முன்வைத்தும், தக்க தீர்வு கிடைக்காததால், தங்கள் வேலையை ராஜினாமா செய்ததாக தெரிவித்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...