Thursday, June 1, 2017

ஆள் இல்லாமல் ஓடிய ரயில் இன்ஜினால் பரபரப்பு

பதிவு செய்த நாள்31மே2017 22:54




திருச்சி: பழுதான ரயில் இன்ஜினை இழுத்து சென்ற, மாற்று இன்ஜினில் ஆள் இல்லாமல், 10 கி.மீ.,க்கு மேல் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சியிலிருந்து காலை, 6:10 மணிக்கு, கரூர் செல்லும் பயணிகள் ரயிலை இழுத்துச் செல்ல வந்த, இன்ஜின் பழுதடைந்தது. இதையடுத்து, மாற்று இன்ஜின் மூலம் அது, மாற்றுப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மாற்று இன்ஜினில் பழுது ஏற்பட்டது. அதன் டிரைவர், இறங்கி சரி பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த இன்ஜின் எதிர்பாராதவிதமாக நகர துவங்கியது. இதனால், இரு இன்ஜின்களும் ஆள் இல்லாமல் ஓடத் துவங்கின. இதைப்பார்த்த டிரைவர், அவற்றை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு, பிளாட்பாரத்தில் நின்ற அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கியில் தகவல் கொடுத்துள்ளார். அதற்குள் இன்ஜின் வேகமெடுத்து, 30 கிலோமீட்டர் வேகத்தில், கரூர் மார்க்கத்தில் ஓடத்துவங்கியது. இதையடுத்து பாலக்கரை, கோட்டை ரயில் நிலையங்களில் வழித்தடங்கள் நேராக்கப்பட்டு, இன்ஜின்கள் விபத்தில்லாமல் செல்லவும், எதிரே எந்த ரயிலும் வராமலும் பார்த்துக் கொள்ளப்பட்டது. பின், கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கட்டைகளை வைத்து, இன்ஜின்களை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இன்ஜின்கள் நிற்கவில்லை. ரயில்வே தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஒருவர், கோட்டை ரயில் நிலையத்தில் வேகமாக ஓடிச் சென்று, முதல் இன்ஜினில் ஏறி விட்டார். 

சிறிது நேரம் போராடி, குடமுருட்டி பாலம் தாண்டிய பின், ரயில் இன்ஜின் மேடான பகுதியில் மெதுவாக சென்றபோது, சாதுர்யமாக தடுத்து நிறுத்தி உள்ளார். இரு ரயில் இன்ஜின்கள் ஆள் இல்லாமல், 10 கி.மீ.,க்கு மேல் ஓடியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எதிரே எந்த ரயிலும் வராமல் தடுக்கப்பட்டதால், பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024