குடும்ப சூழ்நிலைக்கேற்ப வேறு வேலை தேடுவது தவறில்லை : உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு செய்த நாள்31மே2017 23:46
மதுரை: 'குடும்ப சூழ்நிலையை கருதி, தற்போதுள்ள வேலையைவிட, வேறு நல்ல வேலையைத் தேட முயற்சிப்பதில் குறை காண முடியாது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்க்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும்,' என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்துார் அருகே ராணி மகாராஜபுரம் மகேஸ்வரி. பிளஸ் 2 முடித்துள்ளார். கணவர் இறந்துவிட்டார். மனவளர்ச்சி குன்றிய 2 குழந்தைகள் உள்ளனர். ராணி மகாராஜபுரம் இந்து துவக்கப் பள்ளியில் உதவி சமையலர் பணியில் மகேஸ்வரி சேர்ந்தார். சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்கு அறிவிப்பு வெளியானது. மகேஸ்வரி விண்ணப்பித்தார். வலவிளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சத்துணவு அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். உதவி சமையலர் பணியை ராஜினாமா செய்வதாக, துாத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார்.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. பணி விதிகளை மீறியுள்ளார் எனக்கூறி, மகேஸ்வரியின் ராஜினாமாவை துாத்துக்குடி கலெக்டர் நிராகரித்தார்.
மகேஸ்வரி,'கலெக்டரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை உதவி சமையலர் பணியிலிருந்து விடுவித்து, சத்துணவு அமைப்பாளர் பணியில் சேர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
அரசுத் தரப்பில்,'மனுதாரர் ஏற்கனவே வேறு பணியில் உள்ளார். சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. உதவி சமையலர் பணி ராஜினாமா கடிதத்தை பின்தேதியிட்டு மனுதாரர் அனுப்பியுள்ளார். அது எங்களுக்கு தாமதமாக கிடைத்தது. சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
நீதிபதி உத்தரவு: மனுதாரர் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், அதிகாரிகளிடம் அனுமதிபெறவில்லை; விதிகளை மீறியுள்ளார் என்பது சரியே. ஆனால், அறியாமையால் செய்ததை கடுமையான செயலாக பார்க்கக்கூடாது. இதுபோன்ற வழக்குகளில் சந்தர்ப்ப சூழ்நிலையை, கருத்தில் கொள்ள வேண்டும். நடுநிலையாகத்தான் நீதி வழங்க முடியும்.
மனுதாரரின் 2 குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியுள்ளனர். குடும்ப சூழ்நிலையை கருதி, தற்போதுள்ள வேலையைவிட, வேறு நல்ல வேலையைத் தேட மனுதாரர் முயற்சித்துள்ளார். இதில் குறை காண முடியாது. இதனால் யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லை.
கலெக்டரின் கடிதத்தை பார்க்கையில், மனுதாரர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது தெரிகிறது. அறியாமையால் செய்த தவறை, முக்கியக் குற்றமாகக் கருத முடியாது.
மனுதாரர் தகுதியானவராக இருந்தால், சட்டரீதியான தடை ஏதுவும் இல்லாதபட்சத்தில் மனுவை பரிசீலித்து, சத்துணவு அமைப்பாளர் பணி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, தற்போதைய உதவி சமையலர் பணிக்கு எவ்வித இடையூறும்
அதிகாரிகள் ஏற்படுத்தக்கூடாது என்றார்.
No comments:
Post a Comment