Thursday, June 1, 2017

ஒரு மாத விடுமுறைக்கு பின் ஐகோர்ட் இன்று திறப்பு

பதிவு செய்த நாள்31மே2017 23:06

சென்னை: ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை, இன்று முதல் வழக்கம் போல் இயங்கும். கடந்த காலம் போல இல்லாமல், இந்த கோடை விடுமுறையில், நீதிபதிகள் அதிகம் பேர் பணியாற்றினர்.

உயர் நீதிமன்றத்துக்கு, மே மாதம், கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். அப்போது, விடுமுறை கால நீதிமன்றங்கள், வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் இயங்கும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின் படி, இந்த கோடை விடுமுறையில் பணியாற்ற, 20க்கும் மேற்பட்ட நீதிபதிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். 

அவர்கள், உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் வழக்குகளை விசாரித்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', அங்கீகார மற்ற வீட்டு மனைகள் தொடர்பான வழக்கில், இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. 

முதுகலை மருத்துவ படிப்பில், மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்றுவது தொடர்பான வழக்கில், மாறுபட்ட உத்தரவை, நீதிபதிகள் சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்ததால், மூன்றாவதாக, நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்தார்.

மருத்துவ நுழைவு தகுதி தேர்வான, 'நீட்' முடிவை வெளியிட தடை, சந்தை யில் மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தும் விதிக்கு தடை என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுகளை பிறப்பித்தது.

இவ்வாறு, கோடை விடுமுறையின் போது, பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. விடுமுறை தினமான ஞாயிறு கூட, நீதிபதி கிருபாகரன், வழக்குகளை விசாரித்தார்.

ஒரு மாத கோடை விடுமுறை, நேற்றுடன் முடிந்தது; இன்று முதல், உயர் நீதிமன்றம் வழக்கம் போல் இயங்கும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கோரிய வழக்கு, அங்கீகாரமற்ற வீட்டு மனை தொடர்பான வழக்கு என, பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன.

மே மாதத்தில், நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். 49 நீதிபதிகளை கொண்டு, உயர் நீதிமன்றம் இயங்க உள்ளது. உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75; காலியிடங்களின் எண்ணிக்கை, 26.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025