கேடு விளைவிக்கும் மசூர் பருப்புரூ.144 கோடிக்கு வாங்க அரசு முடிவு
ரேஷனில் வழங்குவதற்காக, உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய, மசூர் பருப்பை, 144 கோடி ரூபாய்க்கு வாங்க, நுகர்பொருள் வாணிப கழகம், 'டெண்டர்' கோரியுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், 1 கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்போது, துவரம் பருப்புக்கு பதில், கனடா மஞ்சள் பருப்பு வழங்கப்படுகிறது. தற்போது, உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய மசூர் பருப்பை வாங்க, வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: துவரம் பருப்பு, கனடா மஞ்சள் பருப்பு, மசூர் பருப்பு என,
ஏதேனும் ஒன்றை, 30 ஆயிரம் டன் வாங்க, வாணிப கழகம், 'டெண்டர்' கோரியுள்ளது. இதில் பங்கேற்க, ஜூலை, 10 கடைசி நாள். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில், 2006 வரை, மசூர் பருப்புவழங்கப்பட்டது.
கேடு விளைவிக்க கூடியது
மசூர் பருப்பை சாப்பிடுவதால், உடலுக்கு கேடு ஏற்படுகிறது என்பதை, அப்போதைய கரூர் மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து, அதை தடை செய்யும்படி, அரசுக்கு பரிந்துரைத்தது. இதன்பின், அந்த பருப்பை வாணிப கழகம் வாங்கவில்லை.
தற்போது, நாமக்கலை சேர்ந்த ஒரு குழுமம், தரமற்ற மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய, 40 ஆயிரம் டன் மசூர் பருப்பை இருப்பு வைத்து உள்ளது. ரேஷனில் ஏழை மக்கள் தான்பருப்பு வாங்குகின்றனர். அவை, தரமற்று இருந்தாலும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க பயந்து வாங்கி செல்கின்றனர்.
எனவே, அந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் வசமுள்ள தரமற்ற மசூர் பருப்பை எப்படியாவது, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்து, பணம் சம்பாதிக்க, அந்த தனியார் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
பல பாதிப்புகளை ஏற்படுத்தும்
அதற்காகவே, அரசியல்வாதிகள் மூலம், அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, மசூர் பருப்பும், டெண்டரில் சேர்க்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும், அந்த பருப்பை டெண்டரில் இருந்து நீக்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment