Wednesday, July 5, 2017

அலட்சியம்:இளையான்குடியில் தார் ரோடு எல்லாம் மண் ரோடானது: பல ஆண்டுகளாக பராமரிக்காததால் மக்கள் பரிதவிப்பு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:37

இளையான்குடி:இளையான்குடி தாலுகாவில் பெரும்பாலான கிராமங்களில், தார் ரோடு மறைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால், மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிக ஊராட்சிகளை கொண்ட ஒன்றியம் இளையான்குடி ஒன்றியம். மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்திருப்பதால், இந்த ஒன்றியத்தை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற புகார் உள்ளது.பல கிராமப்புறங்களில் ரோடு இருந்த அடையாளமே தெரியாமல், குண்டும் குழியுமாக ஒற்றையடி பாதை போல மாறி வருகிறது. ஓட்டு கேட்டு கூட பல அரசியல்வாதிகள் கிராமப்புற பகுதிகளுக்கு வருவதில்லை. சுதந்திரத்திற்கு முன் போட்ட சாலைகள் போல பல சாலைகள் பழுதடைந்துள்ளன. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் உள்ளது.
இளையான்குடி தாலுகாவில்ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 566 கி.மீ., சாலையும், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 276 கி.மீ., துாரமுள்ள சாலைகளும் உள்ளன. இளையான்குடி கண்ணமங்கலம் ரோட்டில்இருந்து விளங்குளம் செல்லும் ரோட்டில் கற்கள் பெயர்ந்து பல வருடங்களாகியும், இன்று வரை சாலைப்பணி மேற்கொள்ளப்படவில்லை.திருவேங்கடத்தில் இருந்து தாயமங்கலம் செல்லும் பாதை யில் தரைப்பாலம் சிதைவடைந்து போக்குவரத்திற்கே, பயனற்றதாக உள்ளது.

வடக்கு கீரனுாரில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். கரும்புக்கூட்டம் பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக கனரக வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. கிராமப்புற சாலைகள் சேதமடைந்து காணப்படுவதால், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் கூட வர மறுக்கின்றன.

இதனால், விபத்து மற்றும் பிரசவ காலங்களில் நோயாளிகளை சரக்கு வாகனங்களில் அழைத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் அரசு பஸ்கள் சரிவர செல்வதில்லை. சரக்கு வாகனங்களை நம்பியே உள்ளனர். இதனால் கிராமப்புற மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து கரும்புக்கூட்டம் சண்முகம் கூறுகையில் : இளையான்குடி தாலுகா தனி சட்டமன்ற தொகுதியாக இருந்த வரை சாலை வசதி, குடிநீர் வசதி குறித்து எம்.எல்.ஏ.,விடம் மனு மட்டுமாவது கொடுத்து வந்தோம். தற்போது, மனு கொடுக்க கூட 30 கி.மீ., தள்ளி உள்ள மானாமதுரை செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு அங்கு செல்ல நினைத்தாலும், எம்.எல்.ஏ., எப்போது இருப்பார் என்றே தெரியவில்லை, என்றார்.எனவே, இளையான்குடி தாலுகாவில் கிராமப்புற சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024