Sunday, July 9, 2017

ஆதார் - பான் இணைப்பால் போலிகள் 'காலி' ஒரு நபர், பல முகம் இனி இருக்காது!

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
03:35



திருப்பூர் : 'பான்' கார்டுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல நன்மைகள் இருப்பதாகவும், கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் மாட்டிக் கொள்வர் எனவும் ஆடிட்டர்கள், தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வங்கி கணக்கில், 'பான்' எண், ஆதார் இணைக்கப்பட்டுள்ளன; ஜி.எஸ்.டி.,யிலும், இவ்விரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. அதுபோல், பான் கார்டுடன் ஆதார் இணைப்பதும், கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுக்கோப்பான முறைகளால், வரிஏய்ப்பு செய்வோரைகண்டறிவது, அரசுக்கு எளிதாகி விடுகிறது.

திருப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர், தனஞ்செயன் கூறியதாவது:பணம் மறுசீரமைப்பின் போது, பான் கார்டு வழங்கினால், சிக்கலாகும் என்பதற்காக, பலரும், ஆதார் எண் வழங்கி, பணம் செலுத்தியுள்ளனர். பான் கார்டு, ஆதார் இணைப்பால், கறுப்பு பணம் செலுத்தியோர் சிக்கிக்கொள்வர்.

வரி ஏய்ப்பு நோக்கத்துக்காக, போலி பான் கார்டுகள் பெறப்படுகின்றன; ஆதார், பான் இணைப்பால், இதுபோன்ற முறைகேடுகளும் தடுக்கப்படும். நேர்மையானவர்களுக்கு, இதனால் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. அதேநேரம், முறைகேடுகளில் ஈடுபட நினைப்போர், பயந்து தான் ஆகவேண்டும். எதிர்காலத்தில், கறுப்புப் பணம் உருவாகாமல் இருக்கவும், இந்த கட்டமைப்புகள் உதவிகரமாக அமையும்.இவ்வாறு ஆடிட்டர் தனஞ்செயன் கூறினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜாசண்முகம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரே நபர், வெவ்வேறு பெயர், முகவரிகளில் பான் கார்டு பெறுகின்றனர். ஆதார்,- பான் இணைப்பால், ஒரு நபர்; பல முகம் என்கிற நிலை ஒழிந்துவிடும். வருமான வரி, வர்த்தகம் சார்ந்த வரி ஏய்ப்புகள் தடுக்கப்படும்.

சில தொழில் துறைகளில், பண பரிவர்த்தனைகள் மறைமுகத் தன்மை கொண்டுள்ளன; அவையெல்லாம் இனி, வெளிப்படை தன்மையுடன் தான் நடந்தாக வேண்டும். சீர்திருத்த நடவடிக்கைகளால், நீண்ட கால அடிப்படையில், பல நன்மைகள் கிடைக்கும்.

அரசுக்கு வரி வருவாய் அதிகரித்து, மக்களுக்கு பயனளிக்கும் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை உருவாக்க, வழி பிறக்கும். சிலர், பான் கார்டு, ஆதார் இணைப்பை எதிர்க்கின்றனர்; இதற்கு அவசியமே இல்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. தவறு செய்வோர் தான் பயப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024