Tuesday, July 25, 2017

தலையங்கம்
நாடே எதிர்பார்க்கும் 14–வது ஜனாதிபதி
‘‘நான் ஜனாதிபதியாக வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. எனது வெற்றி என்பது ஒருமைப்பாட்டுடன் தங்கள் கடமைகளை ஆற்றும் எல்லோருக்குமான ஒரு செய்தியாகும். ஜனாதிபதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இந்திய ஜனநாயகத்தின் மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்’’. இது 14–வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ராம்நாத் கோவிந்த் மிகவும் உணர்ச்சிப்பொங்க கூறிய கருத்தாகும். இருமுறை டெல்லி மேல்–சபை உறுப்பினராகவும், பீகார் மாநில கவர்னராகவும் இருந்து இன்று ஜனாதிபதி பதவியை ஏற்கப்போகும் இவர் சிறந்த சட்டநிபுணர். டெல்லி ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் பல ஆண்டுகளாக வக்கீலாக பணிபுரிந்துள்ளார். பா.ஜ.க.வில் இருந்து போட்டியிட்டு ஜனாதிபதியாகும் முதல் ஜனாதிபதியும் ராம்நாத் கோவிந்த்தான்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்களும், மாநில சட்டசபைகள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போட்டு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தார்கள். இந்த தேர்தலில், பா.ஜ.க கூட்டணியின் சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர். ராம்நாத் கோவிந்த்தான் வெற்றிபெறுவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், இவ்வளவு வித்தியாசத்தில் வெற்றியைப்பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க.வுக்கு எதிர்க்கட்சிதான் என்றாலும் அவர், ராம்நாத் கோவிந்தை ஆதரித்தது அரசியல் அரங்கில் மிகவும் ஆச்சரியத்தைக்கொடுத்தது மட்டுமல்லாமல், மாநில கவர்னராக அவர் எவ்வளவு நடுநிலையோடு பணியாற்றியிருப்பார் என்ற அளவில் நாட்டு மக்களுக்கு அவர்மீது உள்ள மதிப்பு, மரியாதையையும் உயர்த்தியது. இந்த தேர்தலில் ராம்நாத் கோவிந்த் 2,930 ஓட்டுகள் அதாவது, மொத்த ஓட்டில் 65.65 சதவீத ஓட்டுகளைப்பெற்று வெற்றிவாகை சூடினார். மீரா குமார் 1,844 ஓட்டுகள் அதாவது 34.35 சதவீத ஓட்டுகளைப்பெற்றார். மீரா குமார் அடைந்த தோல்வியையும் பெருமைக்குரிய தோல்வி என்றே கூறவேண்டும். ஏனெனில், இதுவரை நடந்த தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்களில் அதிக ஓட்டுகள் பெற்றவர் மீரா குமார்தான். ராம்நாத் கோவிந்துக்கு குறைந்தபட்சம் 116 ஓட்டுகள் எதிர் அணியில் இருந்து கட்சிமாறி கிடைத்திருக்கின்றன. 12 மாநிலங்களில் காங்கிரஸ் அணியில் இருந்து கட்சிமாறி ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் யாரும் கட்சிமாறி ஓட்டுப்போடவில்லை. மொத்தம் உள்ள 29 மாநிலங்களில், 21 மாநிலங்களில் மீரா குமாரைவிட, ராம்நாத் கோவிந்த்துக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் 21 எம்.பி.க்கள் மற்றும் 56 எம்.எல்.ஏக்கள் போட்ட ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது, நிச்சயமாக இது ஜனநாயகத்தின் மீது விழுந்துள்ள கரும்புள்ளியாகும். ஆனால், இதிலும் தமிழ்நாடு பெருமையை தட்டிச்சென்றுள்ளது. தமிழ்நாட்டில் போடப்பட்டுள்ள ஓட்டுகளில் ஒரு ஓட்டுகூட செல்லாத ஓட்டு இல்லை. கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்பட 15 மாநிலங்களில் செல்லாத ஓட்டுகள் போடப்படவில்லை.

ராம்நாத் கோவிந்த் இன்று பொறுப்பேற்றபிறகு, அரசியல் சட்டத்தின் பாதுகாவலராகவும், கட்சிக்கு அப்பாற்பட்டு ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பவராகவும் மாறிவிடுகிறார். ஜனாதிபதி பதவியை ‘அலங்காரப்பதவி’ என்றும், ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பதவி என்றும் விமர்சனங்கள் கூறப்படுவது உண்டு. இந்த பெயரைப்பெற்ற ஜனாதிபதிகளும் உண்டு. ‘‘அரசியல் சட்டம்தான் எனது வேதவாக்கு, நான் நீதி தேவதைபோலத்தான் கையில் துலாக்கோல் வைத்துக்கொண்டு செயல்படுவேன்’’ என்று இந்த பதவிக்கே பெருமை சேர்த்தவர்களும் உண்டு. 2019–ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையிலும், முப்படைகளின் தலைவர் என்ற முறையில் எல்லைப்புறங்களில் இப்போது நிலவும் சூழ்நிலையிலும், புதிய ஜனாதிபதிக்கு நிறைய பொறுப்புகள் அணிவகுத்து காத்துக்கொண்டு இருக்கின்றன. நல்ல அனுபவமும், திறமையும், பாரபட்சமற்ற தன்மையும் கொண்ட புதிய ஜனாதிபதியிடம் நாடு நிறைய எதிர்பார்க்கிறது.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...