Wednesday, July 19, 2017

மருத்துவ கவுன்சில் நிர்வாகத்துக்கு மேற்பார்வை குழு அமைக்க அனுமதி

பதிவு செய்த நாள் 18 ஜூலை
2017
22:19

புதுடில்லி: இந்திய மருத்துவக் கவுன்சிலின் நிர்வாகத்தை கண்காணிக்க, ஐந்து டாக்டர்கள் அடங்கிய, புதிய மேற்பார்வை குழுவை அமைக்க, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகத்தில் இருந்த குளறுபடிகளை களைவதற்காக, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, லோதா தலைமையிலான, மூன்று பேர் குழுவை சுப்ரீம் கோர்ட் அமைந்திருந்தது. கடந்த, 2016, மே மாதம் இந்தக் குழுவை அமைத்தபோது, ஓராண்டுக்கு அல்லது மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யும் வரை, இந்தக் குழு செயல்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கவுன்சில் நிர்வாகத்தை கண்காணிக்க, புதிய மேற்பார்வை குழுவை அமைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குழுவில் இடம்பெறுவோர் பெயரை அறிவிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, ஐந்து பிரபல டாக்டர்கள் அடங்கிய, புதிய மேற்பார்வை நிர்வாகக் குழுவை அமைப்பதாகவும், அந்த டாக்டர்களின் பெயர் பட்டியலையும், மத்திய அரசு, நேற்று தாக்கல் செய்தது.

அதை ஏற்ற, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியதாவது:

மத்திய அரசு அறிவித்துள்ள, புதிய மேற்பார்வைக் குழுவை ஏற்கிறோம். அதன்படி, இதுவரை இருந்த மேற்பார்வை குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசு கூறியுள்ள, ஐந்து பிரபல டாக்டர்களும், மிகச் சிறந்தவர்கள். அந்தப் பெயர்கள் குறித்து திருப்தி அடைகிறோம். இதில் யாராவது குழுவில் சேருவதற்கு மறுத்தால், மாற்று பெயரை, மத்திய அரசே அறிவிக்கலாம்.

இவ்வாறு, சுப்ரீம் கோர்ட் அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024