Monday, July 24, 2017

சதுரகிரி மலைப்பாதையில் நெரிசல் : மூச்சுத்திணறி 2 பக்தர்கள் பலி
பதிவு செய்த நாள்23ஜூலை
2017
23:41




வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், நேற்று ஆடி அமாவாசை விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மலைப்பாதைகளில் நெரிசல் ஏற்பட்டு, 6 மணிநேரம் பக்தர்கள் தவித்தனர்.

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலை கோயில் ஆடி அமாவாசைவிழா, ஜூலை 21 ல் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. அதனைதொடர்ந்து சிவராத்திரிவிழா நடந்தது. முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை விழா நேற்று நடந்தது. மலையில் சுயமாக எழுந்தருளிய சுந்தர மகாலிங்கசுவாமி, சித்தர்கள் வழிபட்ட சந்தனமகாலி்ங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு, சிவராத்திரி அலங்காரம் கலைக்கப்பட்டு அமாவாசைக்காக காலையில் சிறப்புஅபிஷேகம் நடந்தது. பின்னர் சுந்தரமகாலிங்கசுவாமி நாகாபரண அலங்காரத்தில், சந்தனமகாலிங்கசுவாமி ராஜ அலங்காரத்தில், சுந்தரமூர்த்தி சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இம்மூன்று கோயில்களிலும் பரம்பரிய முறைப்படி சங்கொலி முழங்கி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அமாவாசை வழிபாட்டிற்காக நேற்று இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முக்கிய விழாவாக இருந்ததாலும் விடுமுறை நாளாக இருந்ததாலும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மலையிலும், அடிவாரத்திலும், மலைப்பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தடுப்பு உடைப்பு : இவ்விழாவிற்கு பக்தர்கள் இரவில் மலையேறிச் செல்வது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்தது. இரு ஆண்டுகளாக இரவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோல்இந்த ஆண்டு இரவில் மலையேறுவதற்காக நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்ததால் அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த இயலவில்லை. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நெரிசல் அதிகமானதை தொடர்ந்து தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு மலையில் ஏறினர்.
பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. 15 நிமிடத்திற்கு ஒருமுறை ஆயிரம் பேர் வீதம் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மலைப்பாதையில் அடிவாரத்திலிருந்து சில மீட்டர் துாரத்தில் உள்ள மாங்கேனி ஓடை என்ற இடத்திலிருந்து துவங்கி மலைப்பாதை முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்வதற்கு 6 மணி நேரத்திற்கு மேல் ஆனது. பாதுகாப்பிற்கு 1800 போலீசார் குவிக்கப்பட்டும் மலைப்பாதையில் ஒரு போலீஸ்காரர் கூட பணியில் இல்லை. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியும், கடும் வெயிலில் தண்ணீர் இல்லாமலும் மயக்கமடைந்தனர். அவர்களை கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கும், பக்தர்களை பாதுகாப்பதற்கும் யாரும் இல்லை. ஆனால் அடிவாரத்திலும், மலையிலும் ஆங்காங்கு போலீசார் கூடி அரட்டையடித்தபடி இருந்தனர்.

நெரிசலில் டி.ஜி.பி., : டி.ஜி.பி. ராஜேந்திரன், மதுரை கலெக்டர் வீரராகவராவ் மலைக்கு சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்களும் கூட்ட நெரிசலில் சிக்கினர். போலீசார் அவர்களுக்கு பாதை ஏற்படுத்தி கொடுத்து மீட்டு வந்தனர். முறையான திட்டமிடல் இல்லாததாலும், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள், காவல்துறையினர் ஒருங்கிணைந்து பணியாற்றாததாலும் பக்தர்கள் சிரமப்பட்டனர். மலைப்பாதையில் நெரிசல், வாகனங்களை முறைப்படுத்துவதில் குழப்பம், போக்குவரத்து வசதிகள் செய்யாதது என பல பிரச்னைகளை பக்தர்கள் சந்தித்தனர்.

சிவகாசி, வேலுார் பக்தர்கள் பலி : சிவகாசியை சேர்ந்த ரவிக்குமார்,40, உறவினர்கள், நண்பர்களுடன் மலைக்கு சென்றார். சுந்தரமூர்த்தி சுவாமி கோயில் அருகே வந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவிசெய்தனர். சிகிச்சை பலனின்றி அங்கேயே இறந்தார். இருவரது உடலும் சுமைதுாக்கும் பணியாளர்கள் மூலம் அடிவாரம் கொண்டுவரப்பட்டு, பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேலுார், கொசப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,63, உறவினர்களுடன் நேற்று சதுரகிரி மலைக்கு வந்தார். காலையில் மலையேறத் துவங்கியவர் கூட்ட நெரிசல் காரணமாக ஆங்காங்கே இளைப்பாறியபடி மலையேறினார். மாலையில் கோணத்தலைவாசல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். அவருடன் வந்தவர்கள் முதலுதவி செய்தனர். மருத்துவக்குழுவினர் வருவதற்குள் இறந்தார். ஒரேநாளில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு : மலையில் மொட்டை எடுத்த பக்தர்கள் குளிக்க முடியாமல், பாட்டில் குடிநீரை வாங்கி குளித்தனர். 10 ரூபாய் பாட்டிலின் விலை 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மதியத்திற்குள் மலையில் இருந்த கடைகளில் பாட்டில்கள் விற்பனையாகி விட்டதால், தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கவும் முடியாத நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது.

சுமையுடன் நடை : வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள் அடிவாரத்திற்கு 7 கி.மீ., முன் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் சிறப்பு பஸ், ஆட்டோக்களில் அடிவாரம் வரை செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அந்த இடத்திலிருந்து சிறப்பு பஸ், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் அடிவாரம் வரை 7 கி.மீ., சுமைகளையும் துாக்கிக்கொண்டு நடந்தே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...