குழந்தை பிறப்பு: ஆண்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு!
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று குழந்தை
பிறப்பு காலத்தின்போது ஆண்களுக்கு ஊதியத்துடன் 3 மாதம் விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
குழந்தை பிறப்பு காலத்தின்போது பெண்களுக்கு மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு அதிகபட்சமாக ஒரு சில நிறுவனங்கள் 10 நாட்கள் வரை விடுப்பு வழங்குகின்றன. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்தைகளுக்கு ஊதியத்துடன் வழங்கப்படும் விடுப்பு காலத்தை 6 வாரங்களாக அதிகரித்தது. இந்திய அளவில் கம்மின்ஸ் இந்தியா நிறுவனம் ஆண்களுக்கான தந்தைமை விடுப்பு காலத்தை ஒரு மாதமாக உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், சேல்ஸ்ஃபோர்ஸ் என்ற நிறுவனம் தந்தைமை விடுப்பு காலத்தை ஊதியத்துடன்12 மாதங்களாக உயர்த்தத் திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜனநேஷ் குமார் கூறுகையில், ஊழியர்களுக்கு ஊதியத்துடன் தந்தைமை விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சரியானது என்று நாங்கள் நம்புகிறோம்.
பெற்றோராக மாறுவது என்பது மிகப் பெரிய காரியம். ஊதியமில்லா விடுப்பு எடுக்கும் பெற்றோர்களின் நிலை என்பது சவால் வாய்ந்ததாக இருக்கிறது. குழந்தை பிறப்புக்கு பின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேலைத் தொடர்பான முரண்பாடுகள் குறித்து அறிந்துகொள்வதற்கு வலுவான தந்தைமை கொள்கை உதவுகிறது. மேலும், இந்தியாவில் தந்தைகளுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பான பேச்சை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்நிறுவனத்தில் 25 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். இந்தியாவில், டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கான பேறுகால விடுப்பை 6 மாதங்களாக அரசாங்கம் சமீபத்தில் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment