Wednesday, July 12, 2017

திருப்பதி செல்வோரின் கவனத்துக்கு...!

திருப்பதி வெங்கடாஜலபதியை மலைப்பாதை வழியாக தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் வந்திருக்கிறது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு மலைப்பாதை வழியாக நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு பாதைகள் வழியாக பக்தர்கள் வந்து திருப்பதியில் திவ்ய தரிசனம் எனும் சிறப்பு தரிசனம் பெறுகிறார்கள். கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க மலைப்பாதை வழியாக நடைபயணம் வரும் பக்தர்களுக்கு இனி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திவ்ய தரிசனம் கிடையாது என்றும், தினமும் முதலில் வரும் 20,000 பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன அனுமதி என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனால் திவ்ய தரிசனம் மறுக்கப்பட்ட பக்தர்கள் இலவச தரிசன வரிசையில் நின்று ஸ்வாமியை சேவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது. நிர்வாகம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தோசமான செய்தி என்னவென்றால், மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் இனி தங்கள் சுமைகளை தாங்களே சுமந்து வருத்தப்பட வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆமாம், திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள், தங்களது பொருட்களை பேக் செய்து பூட்டி, மலையடிவார அலிபிரி சோதனைச் சாவடியில் உள்ள அலுவலகத்தில் கொடுத்து விடலாம். அவர்கள் அதை பெற்றுக்கொண்டு இரண்டே மணிநேரத்தில் மலையில் உள்ள அலுவலகத்தில் கொண்டு சேர்த்துவிடுவார்கள். நடந்து சென்ற பக்தர்கள் மலை மேலே இருக்கும் அலுவலகத்தில் தங்களின் டோக்கனை கொடுத்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இலவச சேவையான இது மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024