Wednesday, July 26, 2017

மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 'நீட்'தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு கோரி எப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.


முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்திய நிலையில் தி.மு.க., - எம்.பி.,க்களும் மத்திய அமைச்சர்களை சந்தித்துநெருக்கடி கொடுத்துள்ளனர்.இதனால் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு புதிய ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் அளிப்பார் என, கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி தேர்வு நடந்து முடிந்தாலும் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 'நீட்' தேர்வில், குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளனர். இதனால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் சூழல் உள்ளது.

ஏற்கவில்லை

'தமிழக கிராமப்புற மாணவர்களால் மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுடன் போட்டி போட முடியாது என்பதால் நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழக அரசு வலியுறுத்தியது. அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தமிழக சட்டசபையில், இரண்டு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதை மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.

மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்க, கால தாமதம் ஏற்பட்டதால் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 85 சதவீதம் உள் ஒதுக்கீடுவழங்கும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. அதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால்மருத்துவ கவுன்சிலிங்கை நடத்த முடியாமல், அரசு தவித்து வருகிறது.

'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என, அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறாவிட்டால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகியோர், 20ம் தேதி, பிரதமரை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, மனு கொடுத்தனர்.
அதன் பின் 23ம் தேதி மீண்டும் டில்லி சென்றனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சென்று, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நட்டா ஆகியோரை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினர். அ.தி.மு.க., - எம்.பி.,க்களும் உடன் சென்றனர்.
அதே போல் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், அவரது அணி எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் 23ம் தேதி இரவு டில்லி புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினர்.
அ.தி.மு.க., இரு அணியினரும், 'நீட்' தேர்வில் இருந்து, விலக்கு பெற முயற்சிப்பதைக் கண்ட தி.மு.க., - எம்.பி.,க்களும், மத்திய அமைச்சர்களை சந்தித்து அதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

நம்பிக்கை

மேலும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் கட்சி வேறுபாடின்றி லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

பா.ம.க., - எம்.பி., அன்புமணி ராமதாசும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரினார். எப்போதும் இல்லாத வகையில் அனைத்து கட்சிகளும் இந்த விஷயத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இதன் காரணமாக தமிழகத்திற்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. எனவே, நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.
புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவியேற்ற நிலையில் விரைவில், 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு எப்போது வரும் என, தமிழக மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

வெங்கையாவுக்கு ஆதரவு ஏன்?

''வெங்கையா நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பர் என்பதாலும், தென் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும், துணை ஜனாதிபதி தேர்தலில், அவருக்கு ஆதரவு அளிக்கிறோம்,'' என, தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார்.

புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, டில்லி வந்திருந்த தமிழக முதல்வர் பழனிசாமி, பார்லிமென்ட்டில் உள்ள அலுவலகத்தில், பிரதமர் நரேந்திர மோடியை, நேற்று சந்தித்துப் பேசினார்.
இதன்பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''நீட் தேர்வில் இருந்து விலக்க அளிக்க வேண்டுமென, பிரதமரிடம் கேட்டுள்ளேன்,'' என்றார். இதையடுத்து, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், தே.ஜ., கூட்டணி வேட்பாளரான வெங்கையா நாயுடுவை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின், நிருபர்களிடம், முதல்வர் பழனிசாமி கூறியதாவது: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடுவுக்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் ஓட்டளிப்பது என, ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது; இதை நேரில் வந்து, அவரிடம் தெரிவித்துள்ளோம்.
வெங்கையா நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பர்; தென்மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழக நலனின் அக்கறை உடையவர் என்பதால், இவரை, அ.தி.மு.க., ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வெங்கையா நாயுடு கூறுகையில், ''துணை ஜனாதிபதி பதவி, அரசியலுக்கு அப்பாற்பட்டது; இந்த பதவியின் மூலம், தமிழக நலன்களுக்கு உறுதுணையாக இருக்க முயற்சிப்பேன். எனக்கு ஆதரவு அளிக்கும், அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு நன்றி,'' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...