வாரமாக தொடர்ந்து ஏறுமுகம் தக்காளி கிலோ ரூ.120:10 ஆண்டுக்கு பின் கிடுகிடு உயர்வு, பொதுமக்கள் கடும் பாதிப்பு
2017-07-13@ 00:33:15
சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிலோ தக்காளி ரூ.120க்கு சில்லரை கடைகளில் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு தக்காளி லாரிகளில் அனுப்பப்படுகிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் மதனபள்ளி, புங்கனூர், பலமனேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கர்நாடகாவில் சீனிவாசபுரம், சிந்தாமணி, கோலார், ஒட்டிபள்ளி முதலான ஊர்களில் இருந்தும் தமிழகத்தில் தேனி, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி முதலான பகுதிகளில் இருந்தும் இந்த தக்காளி அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மாவட்டங்களின் ஒரு நாள் தக்காளி தேவை 90 லாரிகள் முதல் 120 லாரிகள் உள்ளது. எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 90 லாரிகளில் வந்த தக்காளி, தற்போது வெறும் 40 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால் தக்காளி விலை உயர்ந்துவிட்டது. அதுமட்டுமில்லால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் தக்காளி, பீகார், ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விளைச்சல் குறைவானதால் அந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவை நம்பி இருந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் தக்காளிக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலும் தக்காளி வரத்து கடுமையாக குறைந்துள்ளது.
இதனால் நல்ல தரமான பெரிய தக்காளி கோயம்பேட்டில் கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வறட்சி காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்தது. இதனால்தான் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து குறைவாக உள்ளது. எனவே மொத்த தக்காளி கொள்முதல் வரத்து பாதிக்கும் குறைவாக மாறியதால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.30க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி படிப்படியாக உயர்ந்து, ஒரு கிலோ ரூ. 90க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் அதிகபட்சம் ரூ. 120 வரை விற்கின்றனர். அதேபோல, பச்சைமிளகாய் ஒரு கிலோ ரூ. 20லிருந்து 30 ரூபாய்க்கும் கொத்தமல்லி ஒருகட்டு ரூ. 5லிருந்து ரூ. 15 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைவால் ஏற்பட்ட இந்த விலையேற்றம் இன்றோ நாளையோ குறைந்துவிடும் என்றும் வியாபாரிகள் கூறினர்.
10 ஆண்டுக்கு பின்: கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ. 15லிருந்து 20 ரூபாய் வரை விற்றது. அப்போது தினமும் 50 லாரிகளில் இருந்து 60 லாரிகளில் தக்காளிகள் வந்தன. அச்சமயம் பெய்த கடும் மழையினால் திடீரென பல்வேறு இடங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 20 லாரிகளில் மட்டுமே தக்காளிகள் வந்தன. அப்போது ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்றது. நாளடைவில் குறைந்து மீண்டும் ஒரு கிலோ ரூ. 15லிருந்து ரூ.20க்கு விற்கத் தொடங்கியது.
விலை உயர்வு 2 மாதம் நீடிக்கும்
கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சௌந்தரராஜன் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக கர்நாடகா, ஆந்திராவில் இருந்து நேரடியாக லாரிகளில் தக்காளி வந்துவிடும். தற்போது தக்காளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பீஹார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சென்றால் அதிக விலை கிடைக்கும் என்பதால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளிகளை வியாபாரிகள் அங்கே கொண்டு சென்று விடுகின்றனர். மேலும் தக்காளிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
இந்நிலையில் மழை குறைந்ததால் தமிழகத்தில் தக்காளி விளைச்சலும் குறைந்துவிட்டது. உதாரணத்திற்கு ஒட்டன்சத்திரம், தேனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 30க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி வரும். தற்போது கிருஷ்ணகிரியில் இருந்து மட்டும் ஓரிரு லாரிகளில் தக்காளிகள் வருகின்றன. இதனால்தான் தக்காளி விலை உயர்ந்து விட்டது. இதே நிலை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
No comments:
Post a Comment