Tuesday, July 25, 2017

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
 
ஆடி மாதத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்து இருக்கிறது. 
 
சென்னை,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஓரிரு மாதங்களாக காய்கறிகள் விலை குறைந்து வந்தது. விளைச்சல் அதிகரித்ததால் காய்கறிகள் விலை குறைய தொடங்கியது.

இந்தநிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு காய்கறிகள் விலை ஓரளவு உயர்ந்து இருக்கிறது. ஒரு சில காய்கறிகள் தவிர ஏனைய அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 250 முதல் 300 லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இம்மாதம் ஆடி மாதம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் சைவ உணவுகளே தயாரிக்கப்படும். எனவே காய்கறிகள் தேவை அதிகமாக உள்ள இந்த சூழ்நிலையில் வரத்து குறைவு காரணமாக, காய்கறிகள் விலை உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக முருங்கைக்காய், பீட்ரூட், கத்தரிக்காய், கேரட், சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்திருக்கின்றன. தக்காளி விலை ரூ.20 வரை குறைந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
பல்லாரி- ரூ.10 முதல் ரூ.15 வரை, உருளைக்கிழங்கு- ரூ.15 முதல் ரூ.20, கேரட்- ரூ.50 முதல் ரூ.55 வரை, பீன்ஸ்- ரூ.40 முதல் ரூ.80 வரை, நூக்கல்- ரூ.30 முதல் ரூ.35 வரை, சவ்சவ்- ரூ.35, பீட்ரூட்- ரூ.35 முதல் ரூ.40 வரை, முட்டைக்கோஸ்- ரூ.15 வரை, மிளகாய்- ரூ.50 வரை, இஞ்சி- ரூ.70 வரை, சேனைக்கிழங்கு- ரூ.45, சேப்பங்கிழங்கு- ரூ.45, கத்திரிக்காய்- ரூ.35 முதல் ரூ.60 வரை, வெண்டைக்காய்- ரூ.45, அவரைக்காய்- ரூ.40, கோவைக்காய்- ரூ.30, கொத்தவரங்காய்- ரூ.30, பாகற்காய்(பன்னீர்)- ரூ.55, பெரிய பாகற்காய்- ரூ.40 வரை, முருங்கைக்காய்- ரூ.50 முதல் ரூ.60 வரை, முள்ளங்கி- ரூ.15 முதல் ரூ.20 வரை, வெள்ளரிக்காய்- ரூ.25, புடலங்காய்- ரூ.25 முதல் ரூ.30 வரை, தக்காளி- ரூ.70 முதல் ரூ.80 வரை, காலிபிளவர்(ஒன்று)- ரூ.25 முதல் ரூ.40 வரை, பீர்க்கங்காய்- ரூ.35 முதல் ரூ.40 வரை, சுரைக்காய்- ரூ.15, சாம்பார் வெங்காயம்- ரூ.80 முதல் ரூ.90 வரை, தேங்காய்- ரூ.25 வரை, வாழைக்காய்- ரூ.8 வரை.
இவ்வாறு அவர் கூறினார்.

பழங்களின் விலை நிலவரம் குறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-
விளைச்சல்-வரத்து பாதிக்காத நிலையில் பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மேலும் ஆடி மாதத்தில் முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால், பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. எனவே பெரும்பாலான பழங்கள் கடந்த வார விலையில் தொடருகின்றன.

இன்னும் 10 நாட்களில் சிம்லா ஆப்பிள் வருகை இருக்கும். தரமான ஆப்பிள்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும். அதேபோல எகிப்து ஆரஞ்சு வருகையும் அதிகரிக்கும். மாம்பழ சீசன் இம்மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. ஆயுத பூஜை காலகட்டத்தில் பழங்களின் விலை குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது.

பழங்களின் விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு:-
வாஷிங்டன் ஆப்பிள்- ரூ.200, சீனா ஆப்பிள்- ரூ.180, சிம்லா ஆப்பிள் (இந்தியா) - வரத்து இல்லை. மாதுளை- ரூ80 முதல் ரூ.100 வரை, சாத்துக்குடி- ரூ.30 முதல் ரூ.35 வரை, ஆரஞ்சு- ரூ.80 முதல் ரூ.100 வரை, சப்போட்டா- ரூ.40, அன்னாசிபழம் (ஒன்று)- ரூ.80 முதல் ரூ.90 வரை, கொய்யா- ரூ.40, வாழை (தார்)- ரூ.400 முதல் ரூ.500 வரை, தர்பீஸ்- ரூ.15 வரை, திராட்சை- ரூ.60, கிர்ணி பழம்- ரூ.20.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...