Sunday, July 9, 2017

இந்திய சினிமாவுக்கு உலக முகம் கொடுத்தவர் கே. பாலச்சந்தர் கவிஞர் வைரமுத்து புகழாரம்

திருவாரூர்: இந்திய சினிமாவுக்கு ஓர் உலக முகம் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் என்றார் கவிஞர் வைரமுத்து.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடியில் இயக்குநர் சிகரம் மறைந்த கே. பாலச்சந்தருக்கு மார்பளவு வெண்கலச் சிலை வைக்க கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்துள்ளார். சிலைத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை.9") மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை கவிஞர் வைரமுத்து சிலை வைக்கப்பட்ட இடம் மற்றும் விழா முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்ட போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 

இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் பிறந்த ஊரில், பிறந்த தெருவில், அவர் வீட்டு வாசலில் இப்போது நான் நிற்கிறேன். பிறந்த வீடு தற்போது பள்ளியாக செயல்படுகிறது. அவரது வீட்டு வளாகத்தில் அவரது சிலை நிறுவப்படுகிறது. இந்திய சினிமாவுக்கு ஓர் உலக முகம் கொடுத்தவர். தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு தனி நிறம் கொடுத்தவர்.

பாலச்சந்தருக்கு முன்னும், பாலச்சந்தருக்கு பின்னும் ஒரு திரை வரலாறு எழுதப்படலாம். அப்படிபட்ட மாமேதையை பெற்றுக்கொடுத்த மண் இந்த மண்.
அவர் பிறந்த வீட்டில், பிறந்த மண்ணில் இந்த விழா கொண்டாடப்படுவதான் நாங்கள் பெருமையாக கருதுகிறோம். மார்பளவு வெண்கலச் சிலையை இயக்குநர் சிகரத்தின் துணைவியார் ராஜம் பாலச்சந்தர் திறந்து வைக்கிறார்.

கலைஞானி பத்மபூசன் விருது பெற்ற நடிகர் கமலஹாசன், இயக்குநர்கள் மணிரத்தினம், வசந்த் எஸ். சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், நானும் புகழுரை நிகழ்த்துகிறோம். விழாவில் பெருமைக்குரியவர்கள் சிறப்பு பெறுகிறார்கள்.
இந்த விழாவை நான் எப்படி கருதுகிறேன் என்றால் அறிவு கொண்டாடப்பட வேண்டும், கலை உலகத்தின் முன்னோடிகள் மதிக்கப்பட வேண்டும். இதனால் இளைய தலைமுறை புதிய எழுச்சிப் பெற வேண்டும்.

திரை உலகில் தடம் பதித்த ஒருவர் எதிர் காலத்தில் கொண்டாடப்படுவார்கள் என்ற நம்பிக்கை இளைய தலைமுறையினருக்கு வரவேண்டும். பாலச்சந்தர் படத்தைப் பொருத்த வரையில் நான் அவரது படங்களை பாடங்கள் என்று கருதுகிறேன்.

இயக்குநர்கள், கதாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், நடன இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், பாடலாசி ரியர்கள், இசை அமைப்பாளர்கள் அத்தனை பேரும் பாலச்சந்தரின் படத்தைப் பார்த்தால் கற்றுக்கொள்ளலாம். அவர் கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசான். அந்த மாமனிதரின் திருவிழா நடைபெறுகிறது.

தமிழகத்தின் கலை ரசிக பெருமக்களையும், ஒருங்கிணை ந்த தஞ்சை மாவட்ட தமிழ் அன்பர்களும் வருக வருக என வரவேற்கிறேன்.

உள்ளூர் மக்கள் அனைவரும் உங்கள் வீட்டு விழாவுக்கு எல்லோரும் வரவேண்டும். ஊடகத்துறையினர் இந்த விழாவை உலக விழாவாக மாற்றிக்கொடுக்க வேண்டும். எங்கள் பாலச்சந்தர் என்ற தமிழ்நாட்டுக் கலைஞரை உலக கலைஞராக உயர்த்திப் பிடியுங்கள் என்றார் வைரமுத்து.

No comments:

Post a Comment

Driverless metro to begin trials at Madhavaram by '28

Driverless metro to begin trials at Madhavaram by '28  24.12.2024 Chennai : Chennai Metro Rail Limited (CMRL) will begin testing its fir...