Sunday, July 9, 2017

திருடர்களிடமிருந்து காப்பாற்றிய நாகப்பாம்பு...நன்றிக்காக நினைவு மண்டபம் எழுப்பிய தம்பதியர்

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
00:07

காரியாபட்டி :பண்டைய காலத்தில் அதிசயம், ஆச்சரியமூட்டும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.பெரும்பாலான வரலாறுகள் எப்படியாவது தெரிந்துவிடும். சில வரலாறுகள் வெளியில் வராமல் காணாமல் போய்விடும். ஆனால் அப்படிப்பட்ட வரலாறும் எப்படியாவது சில நேரங்களில் வெளிச்சத்திற்கு வரும் போது, நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில், காரியாபட்டி மாங்குளத்தில் ஒரு நினைவு மண்டபம் பாழடைந்து, மாடு கட்டும் இடமாக கிடந்தது. யாரால், எதற்காக நினைவு மண்டபம் கட்டப்பட்டது என விசாரித்த போது, பலருக்கு அதுபற்றிய விபரங்கள் தெரியவில்லை.

அங்குள்ள பெரியவரிடம் கேட்டபோது, மண்டபம் கட்டியதற்கான கருவை மட்டும் தெரிவித்தார். முழுவிபரம் தெரியாவிட்டாலும், அவர் சொன்ன வரலாறு மிகவும் அருமையானதாக இருந்தது. அது என்னவென்றால், ராணிமங்கமாள் காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பாதையிருந்தது. அதில் ஒரு பாதை மாங்குளம் வழியாக திருமங்கலம் வரை செல்கிறது.

தலைதெறிக்க ஓட்டம்
பாதசாரிகள் தங்கி ஓய்வெடுக்க ஆங்காங்கே மண்டபம், பசியாற அன்னதான சத்திரம், தாகம் தீர்க்க கிணறு போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வாணிபத்திற்கோ, உறவினர்களின் வீடுகளுக்கோ செல்ல ஒரு வாரம், பத்து நாட்கள் என நடந்து சென்று வருவது வழக்கம். அப்படி வாணிபத்திற்காக மதுரைக்கு வந்த செட்டியார் தம்பதியினர், மாங்குளத்தை வந்தடைந்த போது இரவாகிவிட்டது. இதற்கு மேல் நடந்து சென்றால் திருடர்களிடம் சிக்கிக் கொள்வோம் என யோசித்து, அங்கிருந்த அன்னதான சத்திரத்தில் உணவு சாப்பிட்டு அங்கேயே ஓய்வெடுக்க முடிவு செய்தனர். அவ்வாறு சாப்பிட்டு ஓய்வெடுத்த போது, நடு இரவில் திருடர்கள் இவர்களை சுழ்ந்துள்ளனர். அப்போது, ஒரு நாகப் பாம்பு துாங்கிக் கொண்டிருந்த தம்பதியரின் அருகில் தலையை துாக்கி நின்றுகொண்டிருந்ததை பார்த்த திருடர்கள், தலைதெறிக்க ஓடினர். விடியும் வரை எங்கும் நகராமல் பாம்பு அங்கேயே நின்றிருந்தது.
இன்றளவும் பேசுகிறது


காலையில் எழுந்து பார்த்த போது, பாம்பு மெதுவாக நகர்ந்து சென்று மறைந்தது. இந்த அதிர்விலிருந்து மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த தம்பதியினர் அங்கேயே தங்கினர். அப்போது, ஒரு நாள், இரவில் நடந்த சம்பவத்தை திருடன் ஒருவன் கூறியதை கண்டு ஆச்சரியமடைந்தனர் தம்பதியர். தங்களுக்கு அரணாக இருந்த நாகப் பாம்புக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக காலமெல்லாம் இவற்றை நினைவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த இடத்தில் நினைவு மண்டபம் எழுப்பி வழிபட்டு வந்துள்ளனர். தனது வருமானத்தில் ஒருபகுதியை அங்கிருக்கும் அன்னதானத்திற்கு வழங்கினர்.

இன்று சிதலமடைந்து, மாடுகள் கட்டும் இடமாக இருந்தாலும், அவர்களது நினைவை இன்றளவும் பேச வைத்திருக்கிறது. ஒரு துாணில் அந்த தம்பதியரின் சிலையும் வடிக்கப்பட்டு உள்ளது. ஊருக்கு மேற்கு பக்கத்தில் உள்ள இந்த நினைவு மண்டபம் இன்றும் நன்றிக்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...