Saturday, July 8, 2017

மாத்திரை மாற்றி கொடுத்ததால் ஒருவர் உயிரிழப்பு

By DIN  |   Published on : 08th July 2017 03:35 AM  |   
சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் ரத்த அழுத்தத்துக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரைக்குப் பதிலாக வேறு மாத்திரை கொடுத்ததால் ராமன் (59) என்பவர் உயிரிழந்தார்.
திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் குப்பத்தைச் சேர்ந்தவர் ராமன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த இவர், உயர் ரத்த அழுத்த நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 20 - ஆம் தேதி ராமனுக்கு மருத்துவர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரையை எழுதிக் கொடுத்துள்ளார். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேரடி பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் மருந்து சீட்டைக் கொடுத்து ராமன் மருந்து வாங்கியுள்ளார். ஆனால், மருந்துக் கடைக்காரர் மாத்திரையை மாற்றி, புற்றுநோய்க்கான மாத்திரையை கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதை அறியாத ராமன் 6 நாட்களாக மாத்திரையை உட்கொண்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
தந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த ராமனின் மகன் சக்திவேல், மாத்திரை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தியதில் தவறான மாத்திரையால் தான் ராமன் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேல் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் மருந்து கடை உரிமையாளர் பலவேசம், ஊழியர் சுரேஷ் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024