Saturday, July 8, 2017

பேரறிவாளனுக்கு பரோல்: தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம்

By DIN | Published on : 08th July 2017 12:22 PM  |



சென்னை: பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, பேரறிவாளனுக்கு பரோல் அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமை வழக்குறைஞரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பின்னணி : 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காக 30 நாள்கள் விடுப்பு வழங்கும்படி விடுத்த கோரிக்கையைச் சிறைத் துறை ஏற்கனவே நிராகரித்து விட்டது.

மத்திய சட்டங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் அவர் தண்டிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு தண்டனை நிறுத்தச் சட்டத்தின்படி அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது என்று வேலூர் மண்டல சிறைத் துறை துணைத் தலைவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்தியச் சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மாநில அரசுகள் சிறை விடுப்பு வழங்கியதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு இரு ஆண்டுகளில் 5 மாதங்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மற்றொரு தமிழரான ரவிச்சந்திரனுக்கு 4 முறை சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சட்டங்களின்படி விதிக்கப்பட்ட தண்டனையை பேரறிவாளன் அனுபவித்து முடித்து விட்டார். இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனையை மட்டும்தான் தற்போது அவர் அனுபவித்து வருகிறார். எனவே பேரறிவாளனுக்கு உடனடியாக சிறை விடுப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024