Saturday, July 8, 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட படிகள் ஜூலை மாத சம்பளத்துடன் கிடைக்கும்

By DIN  |   Published on : 08th July 2017 12:55 AM  |   
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட படிகளை உயர்த்துவது தொடர்பான அறிவிக்கை அரசிதழில் வியாழக்கிழமை வெளியானது. உயர்த்தப்பட்ட படிகள் ஜூலை 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளத்துடன் கூடுதல் படிகள் கிடைக்கும்.
இதன் மூலம் 34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 14 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்களும் பயனடைவார்கள். படிகள் உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.30,748.23 கோடி கூடுதலாக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
7- ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்தியிருந்தால் கூட மத்திய அரசுக்கு ரூ.29,300 கோடிதான் செலவாகும். ஆனால் மத்திய அரசு தானாக முன்வந்து சில படிகளை உயர்த்தியதால் கூடுதலாக ரூ.1448.23 கோடி செலவு ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 53 படிகளை நிறுத்த வேண்டும் என்று ஊதியக் குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால், அவற்றில் 12 படிகளைத் தொடர்வது என்று மத்திய அரசு முடிவெடுத்தது.
முன்னதாக, படிகளை மாற்றி அமைப்பது தொடர்பாக ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை பரிசீலிக்க அதிகாரமளிக்கப்பட்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு அளித்த பரிந்துரைகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த மாத இறுதியில் ஒப்புதல் அளித்தது. இப்போது அரசு அறிவிக்கை மூலம் அவை அமல்படுத்தப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024