'குட்கா' ஊழல் அசல் ஆவணங்களை கொடுங்க! :வருமானவரித்துறைக்கு போலீசார் நெருக்கடி
'குட்கா' வழக்கில், போலீஸ் உயரதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான, அசல் ஆவணங்களை கேட்டு, வருமான வரித் துறை யினருக்கு, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், நெருக்கடி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள குட்கா ஆலைகளில், 2016 ஜூலையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ரூ.39 கோடி :
அப்போது, சிக்கிய டைரியில், சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர், உயர் போலீஸ் அதிகாரிகள், ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு, 39 கோடி ரூபாய் கொடுத்ததற்கான, ஆதாரங்கள் சிக்கியதாக, வருமான வரித்துறையினர் கூறியிருந்தனர். இதையடுத்து, குட்கா வழக்கில் லஞ்சம் பெற்ற போலீஸ் உயரதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்பு போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும், அதில், உயர் போலீஸ் அதிகாரிகளின் பெயர் இல்லை என்ற விபரமும், சமீபத்தில் தெரிய வந்தது.
இந்நிலையில், அந்த வழக்கின் மூல ஆதாரமான, லஞ்ச பட்டியல் அடங்கிய அசல் ஆவணங்களை கேட்டு, வருமான வரித்துறை யினரை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் வற்புறுத்திய தகவல் தெரிய வந்துள்ளது.இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: சில தினங்களுக்கு முன், லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல், டி.எஸ்.பி., உள்ளிட்ட மூன்று அதிகாரிகள், எங்கள் உயரதிகாரிகளை சந்திக்க,சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு வந்தனர்.
வற்புறுத்தல் :
குட்கா வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற் காக, லஞ்சம் பெற்றவர் பட்டியல் அடங்கிய, அசல் ஆவணத்தை தர வேண்டும்' எனக் கேட்டனர். முடியாது என, மறுப்பு தெரிவித்த போதும், நீண்ட நேரமாக, எங்களை வற்புறுத்தினர். நாங்கள், இதே ஆவணத்தின் நகலை, தமிழக தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவ், டி.ஜி.பி., அசோக்குமார் ஆகியோரிடம், கடந்த ஆண்டு கொடுத்துள்ளோம்.
திட்டவட்டம் :
ஆனால், 'அந்த ஆவணம் இல்லை' என, தற்போதைய தலைமை செயலர், கிரிஜா, நீதிமன்றத்தில் கூறினார். போலீஸ் அதிகாரிகளும், அதையே கூறினர்.அதனால், இந்த முறை சுதாரித்து, ஆவணங்களை தர முடியாது என, திட்டவட்டமாக கூறினோம். அவர்கள், 'எங்கள் துறை இயக்குனர், மஞ்சுநாதா நேரில் வந்து பேசுவார்' என, கூறினர். 'இந்த காரணத்திற்காக, இங்கு வருவதாக இருந்தால், அவரை வர வேண்டாம் என, சொல்லி விடுங்கள்' என, நாங்கள் கூறி விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆவணத்தை அழிக்க முயற்சி? :
'குட்கா' வழக்கில், ஆவணத்தை அழிப்பதற்கான
வாய்ப்பு இருப்பதால்,அவற்றை வழங்க மறுத்தது தெரிய வந்துள்ளது. வருமான வரித்துறையினர் கூறியதாவது: தமிழக அரசிடம், ஏற்கனவே, அசல் ஆவணத்தின் நகல்களை தந்துள்ளோம். அப்படி இருக்கும் போது, அசல் ஆவணத்தை கேட்க வேண்டிய அவசியம் என்ன?
எங்களது தரப்பை வலுப்படுத்துவதற்கான, ஒரே ஆவணம் அது தான். அதையும் கொடுத்து விட்டால், பின், லஞ்ச ஒழிப்பு போலீசார், 'அது, தொலைந்து விட்டது' என, கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போது, உயரதிகாரிகள் மட்டுமின்றி, வழக்கில் இருந்து அனைவரும் தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.
'நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான தேவை இருந்தால், அது தொடர்பான உத்தரவை பெற்று வாருங்கள். பின், நாங்களே, நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்; உங்களிடம் தர முடியாது' என, உறுதியாக கூறி விட்டோம்.மேலும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்பே, அசல் ஆவணத்தின் தேவை ஏற்படும். அந்த கட்டத்தை எட்டும் போது பார்க்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment