Thursday, October 26, 2017


தரைமட்டமாகும் வீடு... பறிபோகவிருந்த கிட்னி... பெண்களைப் பரிதவிக்கச் செய்யும் கந்துவட்டி! #EndKandhuVatti

vikatan 

வீ கே.ரமேஷ்
கே.குணசீலன்
ரமேஷ் கந்தசாமி



கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்ற கூலித் தொழிலாளி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தன் குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவம், இந்திய அளவில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. இதே பிரச்னையால், மீனா என்ற பெண் கடந்த வருடம் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றது தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்கூட்டியே கந்துவட்டி பிரச்னையில் அரசு கவனம் செலுத்தியிருந்தால், இந்த நெல்லைக் கொடூரம் நடந்திருக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

என் கணவரின் கிட்னி நாளை பறிபோகப் போகிறது!

கந்துவட்டி கொடுமை நெல்லையில் உயிர்களைப் பலி வாங்கியிருக்க, ஈரோட்டில் ஒருவரின் சிறுநீரகம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளி ஒருவரை நிர்பந்தப்படுத்தி, அவரது கிட்னியைப் பறிக்க, கேரளாவுக்கு அழைத்துச் சென்றுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சம்பூரணம் என்ற பெண் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். கந்துவட்டி கட்ட முடியாததால் கணவரின் கிட்னியைக் கேட்டு, 22-ம் தேதி கேரளாவுக்கு அழைத்துச்சென்றுள்ளதாகக் கண்ணீரோடு கதறினார்.



இதுபற்றி நம்மிடம் பேசிய சம்பூரணம், ''நாங்க ஈரோடு காசிபாளையம் பகுதியில் குடியிருக்கோம். என் கணவர் பெயர், ரவி. எங்களுக்கு ஏழாம் வகுப்புப் படிக்கும் நிவேதா என்ற மகளும், ஆறாம் வகுப்புப் படிக்கும் விஷால் என்ற மகனும் இருக்காங்க. வீட்டுக்காரர் விசைத்தறி தொழிலாளி. நான் கார்மென்ட்ஸில் டெய்லரா இருக்கேன். வீட்டுக்காரர் தறியை லீஸ் எடுத்து ஓட்டினதில் மூணு லட்சம் ரூபாய் நஷ்டமாயிடுச்சு. அதனால், எங்க பகுதியில் உள்ள கந்து வட்டிக்காரங்ககிட்ட முப்பதாயிரம், ஐம்பதாயிரம் என மூணு லட்சத்துக்குக் கடன் வாங்கினோம். ஆனால், வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறோம். சாப்பாட்டுச் செலவுக்குக்கூடக் காசு இல்லை. குழந்தைகளுக்குத் தீபாவளிக்குக்கூட நல்ல சோறு ஆக்கித் தரலை.

ஆனால், கந்துவட்டிக்காரங்க வீடு தேடி வந்துடுறாங்க. கெட்ட கெட்ட வார்த்தையால் திட்றாங்க. இதனால், மனதளவில் நானும் புருஷனும் ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தோம். இந்த நிலைமையில், அவினாசியைச் சேர்ந்த கிட்னி புரோக்கர் வந்தார். ஒரு கிட்னிக்கு 5 லட்சம் கொடுப்பதாக நிர்பந்தம் பண்ணி, 22-ம் தேதி ராத்திரி என் புருஷனையும், அவர் அப்பாவையும் கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க. நாளைக்கு என் புருஷனுக்கு ஆபரேஷன் செஞ்சு கிட்னி எடுக்கப் போறதா இருந்தது. கலெக்டரோட நடவடிக்கையினால என் கணவர் நல்லபடியா திரும்பி வரப்போறாரு” என்றார் கண்ணீர் மல்க.



இதுபற்றி ஈரோடு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, ''நான் எதார்த்தமாக அந்தப் பக்கம் போனபோதுதான் விஷயம் தெரிஞ்சது. சம்பூரணத்தைப் பார்த்துப் பேசினேன். அவர் கணவரிடமும் போனில் பேசினேன். எர்ணாகுளம் மாவட்டம், நெட்டூரில் வி.பி.எஸ். லக்சூரி மருத்துவமனையில் நாளைக்கு ரவிக்கு ஆபரேஷன் செய்யப் போறாங்களாம். அவங்க அப்பாவைக் கையெழுத்து போட கூட்டிட்டு போயிருக்காங்க. இது தெரிஞ்சதும் எப்படியாவது தடுத்து நிறுத்தணும்னு முயற்சி பண்ணினேன். கலெக்டரோட நடவடிக்கையால அவரு திரும்பி வரப்போறாரு'' என்று பதறினார்.

தஞ்சாவூர், காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர், மீனா. இவருக்கு நான்கு பிள்ளைகள். இவர் கணவர் கட்டடத் தொழிலாளி. விபத்து ஒன்றில், காலில் பலத்த அடிபட்டுவிட்டது. அறுவைசிகிச்சை செய்தால்தான் குணப்படுத்த முடியும் என்கிற நிலை. என்ன செய்வதென தெரியாமல் தவித்த மீனா, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கந்துவட்டிக்கு மூன்று லட்சம் கடன் வாங்கி, கணவருக்குச் சிகிச்சை அளித்தார். அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்தார். கடன் கொடுத்தவர், 'உன் வீட்டை எழுதிக் கொடுத்துவிடு. விட்டுவிடுகிறேன்' எனத் தொடர்ந்து பிரச்னை செய்துள்ளார். இதனால், மனமுடைந்த மீனா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடி சிகிச்சையால் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் அந்தச் சமயத்தில் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது மீனா எப்படி இருக்கிறர்?

மீனாவைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றோம். மிரட்சியோடு, ''உங்களுக்கு யார் சார் வேணும்?'' எனக் கேட்டார். நம்மை அறிமுகம் செய்துகொண்டதும், வேதனையான குரலில் பேசினார்.



''என் புருஷனுக்கு அடிபட்டு ஆபரேஷன் பண்ண வேண்டியதா இருந்துச்சு. ஒருத்தர்கிட்ட மூணு லட்சம் ரூபாயை ஐந்து பைசா வட்டிக்குக் கடன் வாங்கினேன். கடன் பத்திரத்தில் நான்கு லட்சம் வாங்கினதா எழுதிப்பேன்னு சொன்னார். வேற வழியில்லாமல் சம்மதிச்சு பணத்தை வாங்கினேன். புருஷனுக்கு ஆபரேஷன் ஆச்சு. மாசம் பதினைந்தாயிரம் வட்டி கட்டினேன். அவர் உடம்பு தேறவே ஏழு மாசத்துக்கு மேல் ஆச்சு. அதுவரைக்கும் வீட்டில் வேற வருமானம் இல்லை. ஆனாலும் கஷ்டபட்டு 11 மாசம் வரைக்கும் வட்டி கொடுத்தேன். அப்புறம், பிள்ளைகங்க படிப்பு, வீட்டுச் செலவுனு சமாளிக்க முடியலை. மூணு வேளைச் சாப்பாடு சாப்பிடவே முடியாமல், பட்டினி கெடந்தோம். ரெண்டு மாசமாக வட்டி கொடுக்கலை. அதுக்கு வட்டி போட்டு டிபிஎல் வட்டி என ஒரு மாசத்துக்குத் தினமும் மூன்றாயிரம் கேட்டாங்க. என்னால் கொடுக்க முடியலை.

அப்போ, என் புருஷன் வேலைக்குப் போக ஆரம்பிச்சதால், 'கொஞ்சம் பொறுங்க. எப்படியாவது கொடுத்துடறோம்'னு சொன்னோம். ஆனால், அவங்க தொடர்ந்து டார்ச்சர் பண்ணினாங்க. ஒருநாள், நான் வெளியே போயிருந்தப்போ வீட்டுக்கு வந்து, என் பசங்களை வெளியே தள்ளி, கதவை பூட்டிட்டுப் போய்ட்டாங்க. பசங்க அழுதுட்டே தெருவில் நின்னுட்டிருந்தாங்க. அதைப் பார்த்ததுமே என் பாதி உசுரு போயிருச்சு.

அவங்ககிட்ட போய் காலில் விழாத குறையாக கெஞ்சி, சாவியை வாங்கிட்டு வந்தேன். அப்புறம், கடன் கொடுத்த சில பேருடன் வீட்டுக்கு வந்தார். 'நீ வாங்கின கடன் வட்டியும் முதலுமா 12 லட்சம் வருது. அதை உடனடியா கொடு. இல்லைன்னா, இந்த வீட்டை எழுதிக் கொடு'னு மிரட்டினார். நான் பயந்துபோய் போலீஸுக்கு போன் செஞ்சு வரவெச்சேன். அதுக்கு அவங்க, 'கடன் வாங்கினால், திருப்பிக் கொடுக்க வேண்டியதுதானே'னு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணினாங்க. 'கொஞ்சம் டைம் கொடுங்க சார். சீக்கிரமே கொடுத்துடறோம்'னு சொல்லியிருந்தேன்'' என நிறுத்திய மீனா, ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்கிறார்.

''எப்படியாவது கடனைக் கொடுத்துடணும்னு கடவுளை வேண்டிக்க வேளாங்கன்னிக்குக் குடும்பத்தோடு போயிருந்தோம். திரும்பி வந்து பார்த்தால், வீட்டுல இருந்த பொருள்களை எல்லாம் வெளியே தூக்கிப் போட்டுட்டு வேற யாரையோ குடி வெச்சுட்டாங்க. 'என்ன இப்படி பண்ணீட்டீங்க?'னு கேட்டதுக்கு, 'முழு பணத்தையும் கொடு. இல்லைன்னா வீட்டை மறந்துட்டு போய்டு'னு சொல்லி அசிங்க அசிங்கமா திட்டினாங்க. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தோம். அப்பவும் அவங்களுக்கு ஆதரவாகவே போலீஸ் பேசினாங்க. எஸ்பி ஆபீசுக்குப் போனால், என்ன ஏதுனுகூட யாரும் கேட்கலை. எல்லோரும் கைவிட்டுட்டாங்களேனு கதறி நின்னேன். இனி வாழ்ந்து என்ன பண்ணப்போறோம் விஷ மருந்து வாங்கிக் குடிச்சுட்டேன். என் பிள்ளைகள் தாய் இல்லாமல் தவித்துடும்னு ஆண்டவன் நினைச்சாரோ என்னமோ, உயிரைக் காப்பாத்திட்டார். ஏழு நாள்கள் ஆஸ்பத்திரியில் இருந்துட்டு வந்தேன். இது நடந்து ஒரு வருஷம் ஆகுது'' என்கிறார் மீனா.



ஆனாலும், பிரச்னை முடியவில்லை. ''என் பெரிய பையன், பத்தாம் வகுப்புல 420 மார்க் எடுத்திருந்தான். ஆனாலும், இந்தப் பிரச்னையால் தொடர்ந்து படிக்கமுடியாமல் மனநிலை பாதிப்பு வந்துருச்சு. இப்போ, அவனுக்குச் சிகிச்சை போயிட்டிருக்கு. நாங்க வாங்கின மூணு லட்சத்தைக் கொடுத்துடறோம்னு சொல்றோம். ஆனால், 'பணத்தைத் திருப்பி வாங்கத்தான் நான் கொடுத்தோமா? உன் வீட்டை நினைச்சுதான் கொடுத்தோம். உன்னால் எனக்கு நிறைய பிரச்னை வந்துருச்சு. அதனால், இந்த வீட்டுலேர்ந்து விரட்டிட்டு, இதைத் தரைமட்டமாக்கறோம்'னு சொல்றாங்க. எந்த சாமி வந்து என் பிரச்னையைத் தீர்க்குமோ தெரியலை. நெல்லையில் நடந்ததை டிவியில் பார்த்து பதறிட்டேன் சார். அப்போ, எனக்கே குடும்பத்தோடு செத்துடலாம்னுதான் தோணுச்சு. ஆனால், பெத்த பிள்ளைகளை அப்படிச் செய்ய தைரியம் வரலை. அதனால், நான் மட்டுமே தற்கொலை செஞ்சுக்கப் பார்த்தேன். இப்போ உயிரோடு இருந்தாலும், தினம் தினம் பயந்துகிட்டு, நடமாடும் பிணம் மாதிரிதான் இருக்கோம். அதுகூட எங்க குழந்தைகளுக்காக. எங்களை மாதிரி ஏழைகளை இந்தச் சட்டம் காப்பாத்த பயன்படாத சார்'' எனக் கேட்கிறர் கண்கள் கலங்க.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...