Tuesday, October 24, 2017

பெற்றோரும் பிள்ளைகளும்


By ம. அஹமது நவ்ரோஸ் பேகம்  |   Published on : 24th October 2017 02:11 AM  |
தனிமனித ஒழுக்கத்தின் அடிப்படை ஒருவன் தனியாக இருக்கும் நிலையிலும், ஒழுக்கத்தைப் பேணுவதாகும். யாருமே பார்க்கவில்லையென்றாலும் தவறு செய்ய மாட்டேன் என்ற உறுதியுடன் ஒரு மனிதன் இருப்பது அவனின் பலத்தைக் காட்டுகிறது.
இப்படிப்பட்ட மனிதர்கள் சந்தர்ப்பம் கிடைத்தாலும், எந்நிலையிலும் தவறு செய்யாத பக்குவத்தையும், மன முதிர்ச்சியையும் கொண்டவர்கள். இப்படிப்பட்ட மனநிலையை, குழந்தைப் பருவத்திலேயே விதைப்பது பெறோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கையிலேயே உள்ளது.
இதற்கான பயிற்சியை அவர்களுக்கு அளிப்பது எளிதான காரியமில்லை என்றாலும், விடாமல் முயற்சி செய்தால் வெற்றி அடையலாம். முதலில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் பின்பற்றும் வகையில் நல்ல விதமாக நடக்க வேண்டும்.
குழந்தைப்பருவத்தில் வளரும் சூழ்நிலையும், பெரியவர்களின் வழிகாட்டுதல் இல்லாததுமே ஒழுக்கக் கேடான விஷயங்களில் அவர்கள் ஈடுபடுவதற்குக் காரணிகளாகும். தகவல் தொடர்பு சாதனங்களான தொலைக்காட்சி, கணினி மற்றும் கைப்பேசி போன்றவை பெரும்பாலும் தவறான விஷயங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
பெற்றோரின் கண்காணிப்பில், அளவோடு, பயனுள்ள தகவல்களுக்கு மட்டும் இவற்றை, குழந்தைகள் பயன்படுத்துவதும், இது விஷயத்தில் பெற்றோர்கள் கண்டிப்பு காட்டுவதும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது.
எல்லா நேரங்களிலும் பெற்றோர்கள் உடனிருப்பது சாத்தியமில்லாததால், அவர்கள் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களிலும் பெற்றோர் தங்களுக்கு கற்றுத் தந்த ஒழுக்கத்தக் கடைப்பிடித்து வருவதற்கு அவர்களைத் தயார் செய்வது பெற்றோர்களின் கடமையாகும்.
பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கண்டிப்பாக சொல்லித் தரவேண்டிய பாடம் இது. வீட்டிலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தவறாமல் இதை சொல்லித் தருவதுடன் தாங்களும் அதனைக் கடைபிடிக்க வேண்டும்.
ஊருக்குதான் உபதேசம் எனக்கல்ல என்று மற்றவர்களுக்கு மட்டும் அறிவுரைகளை அள்ளி, அள்ளி வழங்கி விட்டு நாம் அதனைப் பின்பற்றவில்லையென்றால் அதனால் நமக்கும் சரி, அடுத்தவருக்கும் சரி, எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
ஒருமுறை பள்ளி முதல்வர்களுக்கான பயிலரங்கத்தில் வளரிளம் பருவத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றி ஒருவர் உரையாற்றினார்.
அவர், பெரியவர்கள், குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று சொல்லி விட்டு, நாம் குழந்தைகளுடன் அமர்ந்து தொலைக்காட்சியில் திரைப்படம் பார்க்கும்பொழுது ஆபாசமான காட்சிகள் வந்தால் உடனடியாக தொலையியக்கியை (ரிமோட்) எடுத்து வேறு ஒளிஅலைவரிசைக்கு மாறி விடுவோம்.
இதுவே தனியாக நீங்கள் மட்டும் படம் பார்க்கும்பொழுது ஆபாசக் காட்சிகள் வந்தால் உங்களில் எத்தனை பேர் உடனே வேறு ஒளிஅலைவரிசைக்கு மாற்றாமல் தொடர்ந்து அதனையே பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று கூட்டத்தினரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். பல பேர் (நேர்மையாக) கை தூக்கினார்கள்.
இதில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி, நாம் தனியாக இருக்கும் பொழுது தவறு செய்வது தவறில்லை என்ற மனிதர்களின் நிலைப்பாட்டினைத்தான்.
தனி மனித சுதந்திரம், உரிமை என்ற பெயரில் கல்லூரியில் படிக்கும் ஆண்களும் பெண்களும் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற கூச்சமின்றி பொது இடங்களான பூங்காக்கள், கடற்கரை, சுற்றுலாத்தலங்கள் போன்ற பொழுது போக்கு இடங்களில் வரைமுறையின்றி நடக்கின்றனர்.
குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு இப்படிப்பட்ட இடங்களுக்கு வரும் பெற்றோர், குழந்தைகள் இவற்றைப் பார்க்காமல் இருப்பதற்கு பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே வெளியிடங்களுக்கு, குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வருவதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில் சமீபகாலமாக பள்ளிக் குழந்தைகள் கூட சீருடையில் பொது இடங்களில் அநாகரீமாக நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். இவர்கள் காதோடு கைப் பேசியில் மணிக்கணக்கில் பேசுவது நம் காதுகளில் விழாமல் இருப்பதே
நல்லது.
மனிதர்களின் கண்டுபிடிப்புகளான கைப்பேசி, முகநூல், கட்செவி போன்ற சாதனங்கள் மக்கள் ஒருவருக்கொருவர் எளிதாகத் தொடர்பு கொள்வதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் அவற்றைத் தவறான விஷயங்களுக்காகவே சில மக்கள் பயன்படுத்தித் தங்களின் வாழ்க்கையோடு மற்றவர்களின் வாழ்வையும் சீரழித்துக் கொள்கின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் பாடம் சார்ந்த விஷயங்களுக்காக இந்த சாதனங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
எனவே பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இவற்றின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றிக் கூறுவதுடன் அவர்களைக் கண்காணிக்கவும் வேண்டும்.
திடீரென அவர்களின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுவதை பெற்றோர் மட்டுமல்லாது ஆசிரியர்களும் தெரிந்து கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ஆலோசனைகள் கூறுவது மிகவும் அவ
சியமாகும்.
பெற்றோர் தங்கள் வாழ்க்கையில்
ஒழுக்க நெறிகளின் படி நடந்துகொள்ள வேண்டும். அதனைப் பார்த்து வளரும் குழந்தைகள் நிச்சயமாக தங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேணுவார்கள். பெற்றோரே குழந்தைகளின் முன்மாதிரி என்பதை நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...