Sunday, December 3, 2017

அதிகரிப்பு!  பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை...
ஐ.டி., வங்கித்துறையில் நிலைமை மிகவும் மோசம்




நாட்டின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்கள் பணியிடங்களில், பாலியல் தொல்லைக்கு ஆளாவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் பலர், பாலியல் தொல்லையால் அதிகம் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.




நாட்டின் நகர்ப்புறங்களில், பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்து வரும் நிலையில், பெண்கள், தங்கள் பணியிடங்களில், சக பணியாளர்கள், உயர் அதிகாரிகள், நண்பர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாவது, கடந்த ஆண்டுகளை விட, தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

ஐ.டி., வங்கித்துறை, நிதி நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் துறை, மார்க்கெட்டிங், உற்பத்தி மற்றும் சேவை துறைகளில், பெண்கள் அதிக அளவில் பணி புரிகின்றனர்.
இந்த நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில், பாலியல் தொல்லைக்கு ஆளாவோர் குறித்து, தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது:இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் பலர், தங்கள் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். படித்த பெண்களில் பலர்,
இந்த தொல்லைக்கு ஆளாகும் நிலை அதிகரித்துள்ளது. பிரபல, ஐ.டி.,நிறுவனங்கள், வங்கிகள், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களைச் சேர்ந்த பெண் ஊழியர்கள், சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.

எனினும், இவர்களில் பலர், தங்களுக்கு நிகழும் கொடுமை குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். அவர்களில் வெகு சிலரே, தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாக புகார் அளிக்கின்றனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், பாலியல் தொல்லைக்கு ஆளாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகரித்துள்ளது.

கடந்த, 2013 முதல், 2017 வரை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில், நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து உள்ளன. கடந்த, 2013ல், ஒரு லட்சம்பேரில், 76 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளான நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2017ல், 445 என்ற எண்ணிக்கையை அடைந்து உள்ளது.
இது குறித்து, அமெரிக்காவின் பிரவுன் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர், கிரிஜாபோர்க்கர் கூறியதாவது:இந்தியாவில், பணிக்கு செல்லும் பெண்கள், பாலியல் தொல்லைக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. இதனால், நன்கு படித்த பெண்கள் பலர், பணிக்கு செல்ல தயக்கம் காட்ட துவங்கியுள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்தால், காலப்போக்கில், இந்தியாவில், பெண் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, உற்பத்தி மற்றும் சேவை துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.இது, பொருளாதார ரீதியில் நாட்டிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. பணியிடங்கள் தவிர, சாலைகள், பேருந்து, ரயில் பயணங்களிலும், பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். கல்லுாரிகள், பல்கலைகளிலும் இந்த கொடுமைகள் அதிகரித்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024