தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, தியாகராயநகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
அப்பகுதிகளில் குற்ற சம்பவங்களைத் தடுக்க, கூடுதல் எண்ணிக்கையிலான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் நூற்றுக்கணக்கான கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தியாகராயநகர், புரசைவாக்கம், என்.எஸ்.சி.போஸ் சாலை, வேளச்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட முக்கிய வியாபாரப் பகுதிகளில் தீபாவளி விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆடைகள், நகைகள் வாங்க லட்சக்கணக்கான மக்கள் தியாகராயநகர், புரசைவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர். விற்பனையும் வழக்கத்தைக் காட்டிலும் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் சங்கிலிப் பறிப்பு, திருட்டு சம்பவங்களைத் தடுக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் 275 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கேமராக்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் முகங்களை அடையாளம் காணும் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, புரசைவாக்கத்தில் 46 கேமராக்களும், என்.எஸ்.சி.போஸ் சாலையில் 54 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
தியாகராயநகரில் 3 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்கிலிப் பறிப்பு திருடர்களைப் பிடிக்கும் பணியில், நகைகள் அணிந்தபடி மாறுவேடத்தில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தியாகராயநகர் பகுதியில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட போலீஸார் குற்றத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். தீபாவளி விற்பனை குறித்து தியாகராயநகரில் உள்ள பிரபல பல்பொருள் கடையின் மேலாளர் கூறியது:
கடந்த வாரத்தில் விற்பனை மந்தமாகவே இருந்தது. தீபாவளிக்காக சிறப்பு விற்பனை, சலுகைகளை அனைத்துக் கடைகளும் அறிவிக்கத் தொடங்கியுள்ளன. இதையடுத்து கடந்த 3 நாள்களாக விற்பனை அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வருகை வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல, விற்பனையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்த வாரத்தில் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment