Monday, October 13, 2014

Daily Thanthi 13.10.2014 வாழ்க்கையை முடிவு செய்வது அவரவர் உரிமை

னித வாழ்க்கையில் முக்கியமான பந்தம் திருமண பந்தம்தான். ஒருவர் பிறந்து, வளர்ந்து, தன் பெற்றோரை சார்ந்திருந்த நிலையில், இனி தன் வாழ்க்கை பாதையை தானே வகுத்துக்கொள்ளவேண்டும் என்ற நேரம் வரும்போது, ஆணோ, பெண்ணோ, அவருக்கு ஒரு வாழ்க்கை துணை என்பது அவசியமாகிறது. ஒட்டுமொத்த மனிதகுலமும் திருமண வாழ்க்கைக்கு சிறப்பிடம் கொடுத்து வருகிறது. திருமணம் எந்த வயதில் செய்துகொள்ளலாம்? என்பது தொடர்பாக சமீபகாலங்களில் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்து திருமண சட்டத்திலும், 2006–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்திலும், ஆண்கள் திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது 21 என்றும், பெண்களுக்கான வயது 18 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார்,வி.எஸ்.ரவி ஆகியோர் ஒரு வழக்கில், இந்த வயது வரம்பை
உயர்த்துவது குறித்து தீர்ப்பாக அல்ல, ஆலோசனையாக சில கருத்துக்களை கூறியுள்ளனர். தன்னுடைய 18 வயதான என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மகளை ஒருவர் கடத்திக்கொண்டு போய்விட்டார், மகளை மீட்டுத்தர வேண்டும் என்று ஒரு தந்தை தொடர்ந்த வழக்கில் நீதிபதிகளிடம், போலீசார் அந்த பெண் 18 வயதான மேஜர் என்பதால், அவரது விருப்பப்படி அவர் விரும்பியவருடன் செல்ல அனுப்பிவைக்கப்பட்டார் என்று தெரிவித்தனர். ரெண்டுங்கெட்டான் வயதில் பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்புகொள்வதால் ஏற்பட்ட காதல் காரணமாக, பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்துகொள்கிறார்கள், 18 வயதை அடைந்து விட்டதாலேயே ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கை துணைவரை தேர்ந்தெடுக்கும் சமூக மற்றும் மனோரீதியான பக்குவத்தை அடைந்து விட்டாளா? என்பது புதிராக இருக்கிறது. 18 வயதான ஒரு பெண் மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான லைசன்சு பெறவும், ஓட்டுப்போடவும், வெளிநாடுகளுக்கு செல்லவும், வேலைவாய்ப்பு பெறவும் தகுதி படைத்தவளாகிவிடுகிறாள். ஆனால், இதையெல்லாம் திருமணத்துக்கான மனப்பக்குவத்துக்கு சமமாக ஆணுக்கு 21 வயது என்ற நிலை இருக்கும்போது நினைக்க முடியுமா? என்பது போன்ற கருத்துக்களைக்கூறி, பெண்ணுக்கான திருமண வயதை உயர்த்துவதை பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

நீதிபதிகளின் இந்த கருத்துகளுக்கு, டாக்டர் ராமதாஸ் போன்றவர்களின் ஆதரவும், வேறு சிலரின் எதிர்ப்புகளும் இருக்கிறது. இந்த பிரச்சினை என்பது ‘முள்ளின் மேல் விழுந்த சேலை’ போன்றது. இதை பக்குவமாகத்தான் கையாளவேண்டும். இது மிகவும் சிக்கலான பிரச்சினை. எது திருமண வயது என்பது ஊருக்கு ஊர், சமுதாயத்துக்கு சமுதாயம் வேறுபடுகிறது. இது அந்தந்த கலாசாரம் சம்பந்தப்பட்ட விஷயம். அவரவரின் உணர்வுகள், மனநிலை, குடும்ப சூழ்நிலை பொறுத்த விஷயம். பல நேரங்களில் பெற்றோர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு, குடும்ப கவுரவம் காப்பாற்றப்படவேண்டும் என்ற சூழ்நிலையில், தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சட்டமும் இந்த திருமண வயது தொடர்பாக தெளிவாக இல்லை. ஒரு சட்டம் 18 வயது என்கிறது. இந்திய தண்டனை சட்டம் 375–வது பிரிவில் 16 வயதுக்கு குறைந்த வயது உள்ளவர்களுடன் அவர்கள் சம்மதத்தோடோ, சம்மதம் இல்லாமலோ உடல் உறவுகொள்வது கற்பழிப்பு என்று ஆகும், அதே நேரத்தில் தன் மனைவியுடன் அவளுக்கு 15 வயதுக்குமேல் இருந்தால் அது கற்பழிப்பு ஆகாது என்று கூறப்பட்டுள்ளது. ஆக, 16 வயதுக்குமேல் உள்ளவர்களுடன் அவர்கள் சம்மதத்தோடு உடல் உறவு கொண்டால் அது கற்பழிப்பு ஆகாது என்றும், மனைவியின் வயது 15–க்கு மேல் இருந்தால் அது கற்பழிப்பு ஆகாது என்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் நிலையில், மொத்தத்தில் குழப்புகிறீர்களே என்றுதான் சட்டங்களைப்பற்றி கூறவேண்டியது இருக்கிறது. இத்தகைய நிலையில் எந்த வயதில் திருமணம் செய்துகொள்ளலாம்? என்பதை பெற்றோரும், குடும்பத்தினரும், சம்பந்தப்பட்டவர்களும் முடிவு செய்ய விட்டுவிடலாம், அதற்குரிய விழிப்புணர்வுகளையும், ஆலோசனைகளையும் சமுதாயம் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 03.07.2026