Monday, October 13, 2014

வருமான வரி செலுத்துவோருக்கு ரேஷனில் பொருட்கள் வழங்குவதை நிறுத்த மத்திய அரசு பரிசீலனை மந்திரி பஸ்வான் தகவல்





வருமான வரி செலுத்துவோருக்கு ரேஷனில் பொருட்கள் வழங்குவதை நிறுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலவச மருந்துகள்
நாடு முழுவதும் குறிப்பாக, புதிய உணவு சட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் ஏழைகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். எனவே இவர்களுக்கு ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் இலவச மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பிரச்சினை பரிசீலனையில் உள்ளது.
இந்த நல உதவிகள் தேவையில் இருக்கும் தகுதியானவர்களுக்கு சென்றுசேர வசதியாக வறுமைக்கோடு வரையறை உறுதி செய்யப்பட வேண்டும். வறுமைக்கோட்டை உறுதி செய்வதில் சாத்தியமான தீர்வுக்கு நாங்கள் முயன்று வருகிறோம்.
புகார்கள்
நாட்டில் பொது வினியோக திட்டம் திருப்திகரமாக இல்லை. பொது வினியோக முறையில் வழங்கப்படும் பொருட்கள் ஏழைகளை சென்று சேரவேண்டும். ஆனால் அவ்வாறு சேர்வதில்லை. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதிக தள்ளுபடி விலையில் உணவு பொருட்கள் வழங்குவது மட்டுமின்றி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு அடையாள அட்டை போன்ற ரேஷன் கார்டுகள் வழங்குவதுமே உணவு பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்காகத்தான் அரசின் நலத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
பரிசீலனை
இதற்கிடையே வருமான வரி செலுத்துவோர் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை பொது வினியோக திட்டத்தில் இருந்து எடுப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது சாத்தியமானது தான்.
அரசின் நலத்திட்டங்களுக்கு தகுதியான ஏழை பயனாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக இந்த திட்டத்தில் இருந்து யாரெல்லாம் நீக்கப்படுகிறார்கள் என்பதை இதன் மூலம் சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என நான் நம்புகிறேன். இதைப் போன்ற ஒரு திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மாநிலங்கள் முயற்சிக்க வேண்டும்
அரசின் முதல்நிலை, 2–ம் நிலை அதிகாரிகள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் மாநில பொது வினியோக திட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாநிலங்களும் முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். இது தொடர்பாக மாநில அரசுகளுடன் நான் விவாதிப்பேன்.
இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 03.07.2026