தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கல்விக் கட்டணம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்புக்கான கல்வி கட்டணம் ரூ.15 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 383 இடங்கள் (15%), அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. எஞ்சிய 2,172 இடங்கள் (85%) மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ளன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. இவை தவிர, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) அனுமதியைப் பொறுத்து தனியார் (சுயநிதி) மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
2015-16ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப விநியோகம் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை விண்ணப்ப விற்பனை நடக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 12-ல் வெளியிடப்பட உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங்கை ஜூன் 19 முதல் 25-ம் தேதி வரை நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.
ரூ.3 லட்சம் வரை
இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடம் வசூலிக்கவேண்டிய கல்விக் கட்டணத்தை கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்துள்ளது. அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் குறைந்த பட்சம் ரூ.2.50 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ரூ.1.30 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்புக்கான கட்டணம் ரூ.15 ஆயிரமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரியைவிட 20 மடங்கு அதிகம்
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு கட்டணம் ரூ.13,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் இதைவிட 20 மடங்கு அதிகம். சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படிப்புக்கு ரூ.11,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment