Wednesday, May 20, 2015

தமிழக வரலாற்றில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறையின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. .

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழாய்வாளர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களின் உணர்வாற்றல் மிகவும் போற்றத்தக்கது. ஆசிரியர்களின் உணர்வும் அவரின் உணர்வும் சமக்கோட்டில் பயணிக்கும் காணவியலாப் பேருண்மையை நீங்கள் புதுக்கோட்டையில் காணலாம். புன்னகையால் பணிஏவல் புரியும் உன்னதப்பாங்கினை புதுக்கோட்டை தலைமைப்பண்பில் கண்டு நீங்கள் மகிழ்வடையலாம்.


தொழில்நுட்பப் பயன்பாட்டின் காலத்தேவையை உணர்ந்தவர் ஐயா அருள்முருகன் அவர்கள். மின்னாளுமையின் மேன்மை இயக்கம் புதுக்கோட்டை பள்ளிகளை உள்ளங்கையில் அடக்கியது. முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வழி சற்றேறக்குறைய அனைவருக்கும் மறந்துவிட்ட்து. எனலாம். காரணம் அங்கு யாரும் செல்வதில்லை. எல்லாம் பள்ளியிலிருந்தவாறே முடிந்துவிடுகிறது. நேர்மையின் தாக்கம் எங்கும் மணம் வீசுகிறது. வெளிப்படையான தன்மை உண்மையின் உரைகல்லாய் எழுந்து நிற்கிறது.


மேனிலைப்பள்ளியின் மூத்த தலைமையாசிரியரும் கடைக்கோடி இளைய ஆசிரியரும் சந்திப்பதில் பொதுத்தன்மையே இங்கு நிலவுகிறது. பணித்தீண்டாமை இங்கு ஒழிக்கப்பட்டு விட்ட்து. பணிநிலை ஏற்றத்தாழ்வுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வெகு நாளாகிவிட்ட்து. அனைவரும் யாரும் சொல்லாமலேயே உழைக்கிறார்கள். ஆணையால் பிணைக்கப்படாமல் இயல்பாகவே தம்கடமையுணர்ந்து கற்பிக்கிறார்கள்.


ஆய்விற்குப் போகும் ஐயாவின் வகுப்பறைச் சந்திப்புகளிலெல்லாம் மாணாக்கரின் வறுமை விவாதிக்கப்படும். அறியாமையின் விரிசலில் வீழ்ந்திவிடாதிருக்கும் மனபலம் உள்புகுத்தப்படும். சமுதாயச் சமநோக்கின் வல்லமை உறுதியாக்கப்படும். இங்கு சிரித்த உதடுகளாய் ஆசிரியரும் மாணாக்கரும் வலம் வருவதே ஐயாவின் தலைமைத்துவத்திற்குச் சான்று.


நிருவாகத்திலும் கல்விமேலாண்மையிலும் சமக்கோட்டுத் தத்துவத்தின் பேராண்மையையே அவர் கையாள்வதுண்டு. இதன் நீளல், பேசப்படும் உயர்வை அவரையும் அறியாமல் அவருக்கு அளித்திருக்கிறது. கல்விப்பாடங்களில் கணினித் திரையைப் புகுத்திய அவரால் அலுவலக ஆவணங்களிலும் அந்நுண்ணாளுமையைப் புகுத்தியதை வியக்கும் விழிகளோடு பல உயரலுவலர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளார்கள்.


மறுமுனையில் தமிழ்த் தடயங்களைத் தேடியலைந்து தமிழ்த்தொன்மையை மீட்டெடுக்கும் பேரவா அவரின் ஆய்வறிவின் ஆழத்தை உணர்த்துவதோடு பணிப்பளுவை எதிர்கொள்ளும் போர்த்தந்திரத்தையும் அனைவருக்கும் உணர்த்தியது.


தமிழக வரலாற்றில் இன்று ஒரு பேரின்பத் திறவுகோல். பள்ளிக்கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இது அவரின் உயருழைப்பிற்குக் கிடைத்த நற்சான்று. அனைத்து ஆசிரியப் பெருமக்களும் இவ்வரிய பணிநேர்த்திக்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


இத்தருணத்தில் அவரின் தமிழாழத்தையும், தலைமைத்துவ கூராளுமையையும் அன்பு உணர்வினால் ஆளும் பணிநேர்த்தியினையும் தமிழகத் தமிழாசிரியர் கழகம் போற்றி வணங்குகிறது.


அவர் எங்கு பணிபுரினும் தம் தனியாள்கையினால் மிகச் சிறப்பான உயரிடத்தைத் தக்க வைப்பார் என்பதில் இருவேறு கருத்தில்லை.


புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த ஐயா. முனைவர். நா. அருள்முருகன் அவர்களைப் போற்றி வாழ்த்துவதில் புதுக்கோட்டை மாவட்டம் பேருவகை அடைகிறது.


- சி.குருநாதசுந்தரம், மாவட்டச்செயலர்.தமிழகத் தமிழாசிரியர் கழகம் ,புதுக்கோட்டை

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024