Tuesday, May 19, 2015

கைவிலங்கிடப்பட்ட கைதியுடன் ஹாயாக சினிமா பார்த்த இன்ஸ்பெக்டர்!

விழுப்புரம்: கைதியுடன் இணைந்து சினிமா பார்த்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட மூன்று பேரை விழுப்புரம் எஸ்.பி. சஸ்பெண்ட் செய்துள்ளார்.

விழுப்புரம் நகரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த 36 வயதினிலே படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை, இந்த திரைப்படத்தின் இரவு காட்சிக்கு, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 3 போலீசார் கைதி ஒருவரை கைவிலங்கிட்டு சினிமா தியேட்டருக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அந்த கைதியை போலீஸ் ஜீப்பிலேயே போலீசார் தியேட்டருக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

ஆனால், படம் தொடங்கி அரைமணி நேரத்துக்கு மேலாகி இருந்தது. அப்படியும் 4 போலீசாரும், கைவிலங்கிடப்பட்ட கைதியுடன் அமர்ந்து சினிமா பார்க்க தொடங்கினார்கள். போலீசாரில் இன்ஸ்பெக்டர் மட்டும் சீருடையில் இருந்தார். மற்றவர்கள் சாதாரண உடையில் இருந்தனர். கைவிலங்கிட்ட கைதியை பார்த்ததும் சினிமா பார்க்க வந்தவர்களின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது. இதனால், சிறிது நேரம் தியேட்டரில் சலசலப்பு நிலவியது.

முழுப் படத்தையும் கைதியுடன் அமர்ந்து பார்த்துவிட்டு சென்ற போலீசார் அனைவரும் விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இரவு ரோந்து பணிக்கு சென்ற அவர்கள், அந்த பணியை செய்யாமல் கைதியுடன் தியேட்டருக்கு வந்து சினிமா பார்த்து உள்ளனர்.

இது குறித்து சில தியேட்டர் ஊழியர்கள் கூறும்போது, ''இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார், இதுபோல் தியேட்டருக்கு வந்து சினிமா பார்த்து செல்வது வழக்கம்தான். அவர்கள் டிக்கெட் வாங்கமாட்டார்கள். மேலும், திரைப்படத்தின் இடைவெளியின்போது நொறுக்கு தீனி, காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை அவர்களுக்கு நாங்களே எடுத்து சென்று ஓசியில் வழங்குவோம்" என்றனர்.

அந்த காவல் நிலைய காவலர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, ''அந்த கைதி யார் என்பது பற்றி கூற முடியாது. ஆனால், கைதியை தியேட்டருக்கு அவர்கள் அழைத்து செல்வதற்கு எந்த முன்அனுமதியும்  பெறவில்லை. இதேபோல், போலீஸ் வாகனத்தை எடுத்து செல்வதற்கும் அவர்கள் அனுமதி பெறவில்லை. போலீசார் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்நிலையில், கைதியை கைவிலங்குடன் தியேட்டருக்கு அழைத்து சென்று சினிமா பார்த்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்பட மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024