Wednesday, November 9, 2016

மோடியின் அதிரடி அறிவிப்பு - பணக்கார பிச்சைக்காரன்!


மோடியின் அதிரடி அறிவிப்பு - பணக்கார பிச்சைக்காரன்!

By சாது ஸ்ரீராம் | Published on : 09th November 2016 01:17 PM |






ஒரு பிச்சைக்காரன். கோவில் வாசலில் பிச்சையெடுப்பது அவனது வழக்கம். நல்ல குரல் வளத்துடன் பாடுவான்.

ஒரு நாள். பக்திப் பாடல்களை உருக்கமாக பாடிக்கொண்டிருந்தான். மகிழ்ந்துபோன கடவுள் அவன் முன் தோன்றினார். பிச்சைக்காரன் மகிழ்ந்துபோனான். வணங்கினான். கடவுள் பேசினார்.

‘பக்தா! உன் பக்தி என்னை கவர்ந்தது. உனக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று கேள்!' என்றார் கடவுள்

பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி.

‘கடவுளே மிக்க நன்றி. என்னுடைய வேண்டுதல் இன்றுதான் பலித்திருக்கிறது. நீங்கள் இரண்டு வரங்கள் அளிக்க வேண்டும்' என்று வேண்டினான் பிச்சைக்காரன்.

‘சரி. தருகிறேன்' என்றார் கடவுள்

‘எனக்கு இந்த பிச்சைக்கார வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. அதனால், முதலாவது வரத்தினால் என்னை இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனாக மாற்றிவிடுங்கள்' என்று கேட்டான்.

‘அப்படியே ஆகட்டும். இரண்டாவது வரத்தை கேள்' என்றார் கடவுள்.

‘கடவுளே! இத்தனை காலம் எல்லோரும் பணக்காரர்களாக இருந்தார்கள். நான் ஏழையாக இருந்தேன். அதனால், இரண்டாவது வரத்தினால், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஏழையாக்கிவிடுங்கள்' என்று கேட்டான்.

கடவுள் சிரித்துக்கொண்டே, ‘அப்படியே ஆகட்டும்' என்று சொன்னார்.

பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.

‘பக்தா! நீ கேட்ட வரங்களை வழங்கிவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த வரங்கள் பத்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நாளை காலை விடியும்போது நீதான் இந்த நாட்டின் பெரிய பணக்காரன்' என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள்.

‘பத்து நாட்களுக்கு மட்டும் வரம் கொடுக்கும் இவரெல்லாம் ஒரு கடவுளா' என்று வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி.

அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. சில்லறைக் காசுகளை சேமித்துவைக்கும் பெட்டியை திறந்து பார்த்தான். பத்து செப்புக்காசுகளே இருந்தது.

‘இன்றோடு நம் பிரச்னைகள் தீர்ந்தது. விடிந்ததும் பெட்டி நிறைய தங்கக் காசுகள் நிரம்பி வழியப்போகிறது. வசதியான வீடு ஒன்று வாங்க வேண்டும். குதிரையும், தேரும் வாங்க வேண்டும்' என்றெல்லாம் கணக்குப் போட்டான். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான்.

பொழுது விடிந்தது.

வேகமாக எழுந்து பெட்டியை திறந்து பார்த்தான். அதிர்ந்துபோனான். பெட்டியில் முதல் நாள் இருந்த அதே பத்து செப்புக்காசுகளே இருந்தது.

‘கடவுள் நம்மை ஏமாற்றிவிட்டாரா?' என்று யோசித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தான். நாடெங்கும் ஒரே பரபரப்பு. காரணம், ஒரே நேரத்தில் நாட்டில் இருந்த அனைவரின் பணம், ஆபரணங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. பிச்சைக்காரனுக்கு விஷயம் புரிந்தது. ‘நாட்டில் இருப்பவர்களிடம் ஒரு பைசாகூட இல்லை. அதனால், பத்து செப்புக்காசுகள் வைத்திருக்கும் தானே பணக்காரன்'.

ஆம், பிச்சைக்காரன் பணக்காரன் ஆனான்.

விடிந்ததும் வீட்டில் பணமழை பெய்யும் என்று நினைத்த பிச்சைகாரனுக்கு வருத்தமே மிஞ்சியது. தற்போது கிடைத்திருக்கும் இந்த பணக்கார பட்டத்தால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. கோவில் வாசலுக்கு சென்று பிச்சை எடுக்கவும் வழியில்லை. காரணம் மக்களிடம் பணம் இல்லை.

அவன் யோசிக்கத் தொடங்கினான்.

‘நல்ல வேளை பத்து நாட்களில் மக்களிடம் பணம் வந்துவிடும். பிறகு நமக்கு பிச்சை கிடைக்கும். ஒருவேளை இதுவே நிரந்தரமாக இருந்தால் நம் நிலை என்னவாகும்? தப்பித்தேன். கடவுளுக்கு நன்றி' என்றவாறு பத்து நாட்கள் முடியட்டும் என்று காத்திருந்தான்.

இந்தப் பிச்சைக்காரனின் நிலையில்தான் நாம் இப்போது இருக்கிறோம்.

‘இனி 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது', என்று பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய மோடி அவர்கள் நேற்று இரவு அறிவித்தார். ஒரே நிமிடத்தில் பெரிய கோடீஸ்வரர்களின் பண மெத்தைகள் குப்பை மேடாக மாறிவிட்டது. இது எந்த வகையில் அரசுக்கு உதவும்?

இப்படி அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று அறிவிக்கப்படுவது இது முதன் முறையல்ல. இதற்கு முன், 1979-ம் ஆண்டு இதேபோல மத்திய அரசு அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் ஏராளமானோர் கடும் சிக்கலுக்கு உள்ளாகினர். அப்போது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. அதன்பிறகு தற்போது, பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சியில் இந்த துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த அரசியல்வாதி வீட்டில் 1000 கோடி பதுக்கிவைத்திருக்கிறார்கள் தெரியுமா! மொரீஷியஸ் தீவில், மாலத்தீவில் இந்தியப் பணமாகவே பூட்டி வைத்திருக்கிறார்கள் என்ற வதந்திகள் நம்மைச் சுற்றி பலமுறை வட்டமிட்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் பணம் கட்டடங்களாகவும், வீட்டு மனைகளாகவும் உருமாறியிருப்பதும் நமக்குத் தெரியும். எதற்கும் உதவாத உதவாக்கரை என்று கிண்டல் செய்யப்பட்ட பலர், இன்று அரசியல் கட்சிகளின் கரை வேட்டியுடன் கோடீஸ்வர வண்டுமுருகனாக ஒய்யார கார்களில் பவனி வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த அதிசயங்களை நிகழ்த்தியது கருப்புப்பணம். இந்த அவல நிலையை ஒரே ஒரு உத்தரவினால் சாய்த்துவிட்டார் நமது பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி.



இதன்மூலம், பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்கள் இனி பயனற்றுப் போகும். பெருமளவில் பணப்பறிமாற்றம் நிகழ்த்தி ஆயுதக்கடத்தல், உளவு பார்த்தல், தீவிரவாதம் ஆகியவற்றுக்கான நிதி உதவி தடுக்கப்பட்டுவிட்டது.

இந்த நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு எவ்வளவு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதை தற்போதே சொல்வது கடினம். மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை இதன்மூலம் கொண்டுவரலாம் என்பது மட்டும் புரிகிறது.

மருந்து என்பது நோயைத் தீர்ப்பதற்கு என்றாலும், சில நேரங்களில் அதன் பக்கவிளைவுகள் தரும் பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும். பொருளாதார ரீதியாக கருப்புப் பண முதலைகளுக்கு ‘செக்' வைக்கப்பட்டிருந்தாலும், அன்றாட பணப்புழக்கத்துக்கு இந்த அறிவிப்பு சில சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இன்று வங்கிகளுக்கு விடுமுறை. இரண்டு நாட்களுக்கு ஏ.டி.எம்.கள் செயல்படாது என்று அறிவித்திருப்பது நிச்சயமாக எரிச்சலூட்டுகிறது. மக்களிடையே பீதியைக் கிளப்பியிருக்கிறது. திருட்டுச் சம்பவத்துக்காக திருடனைப் பிடித்து சிறையில் அடைப்பது ஒருவிதம். அப்படியில்லாமல், எல்லோரையும் சிறையில் அடைத்துவிட்டு, நல்லவர்களை தவணை முறையில் விடுவிப்பது மற்றொரு விதம். இந்த இரண்டாவது நிலையைத்தான் மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. செல்லாமல் போனது கருப்புப்பணம் மட்டுமல்ல; நியாயமாகச் சம்பாதிக்கும் மக்களிடம் இருக்கும் நல்லப்பணமும்தான்.

வங்கிக் கணக்கு ஏதுமில்லாமல் கிடைத்த பணத்தை சுருட்டி பானைக்குள் வைக்கும் கிராமத்துப் பாட்டிகளை யார் வழி நடத்தப் போகிறார்கள்?

நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் ஏடிஎம் மையங்களில் தினசரி ரூ. 16 ஆயிரம் கோடி பணப் பரிமாற்றம் நடந்து வருகிறது. இதை அரசு எப்படி கையாளப்போகிறது?

டிசம்பர் 30-ம் தேதிவரை பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்துள்ளது. அதுவரை வங்கியில் கூட்டம் அலை மோதும். பாமர மக்களுக்கு எப்படி இதை புரியவைக்கப்போகிறீர்கள்? ஏற்கெனவே நூறு நாள் வேலை திட்டத்தினால், தேசிய வங்கிகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதை எப்படி வங்கிகள் சமாளிக்கப் போகிறார்கள்?

பெட்ரோல் பங்க்கில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ‘எங்களிடம் சில்லறை இல்லை. வேண்டுமானால், 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள்' என்று ஒரு பங்க்கில் சொல்வதை கேட்கவும் முடிகிறது.

நாட்டில் கருப்பு பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள் யார் என்பது அரசுக்குத் தெரியாதா? அப்படித் தெரியாது என்று சொன்னால், அது கையாலாகாத அரசு. அத்தகைய கருப்புப் பண முதலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல், சாதாரண மக்களுக்கு சிரமங்களை அளிப்பது மிகச்சிறந்த அரசு செய்யும் செயல் அல்ல.

மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடித்து ஊதிப் பெரிதாக்கும் எதிர்கட்சிகள், பிரதமரின் நடவடிக்கையை வரவேற்றிருப்பது கொஞ்சம் வித்தியாசமானது. ‘இதை எதிர்த்தால் நம்மிடம் கருப்பு பணம் இருக்கிறது என்று மக்கள் நினைத்துவிடுவார்கள்' என்ற பயத்தினால் பிரதமரின் நடவடிக்கையை ஆதரித்தார்களா? யாருக்கு தெரியும்.

இந்த நேரத்தில் அரசுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தால், நமது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். அதே நேரத்தில், கருப்புப் பணத்தை சேமித்து வைத்திருக்கும் நண்பர்களுக்கு நம் பெயரில் பணம் மாற்றிக் கொடுக்கும் செயலை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.



எது எப்படியிருந்தாலும், டாஸ்மாக் கடையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வித தடையுமின்றி தாராளமாக வாங்கிக்கொள்ளப்பட்டது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதுவும் ஒரு சர்ஜிகள் ஆபரேஷனா அல்லது மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும் அறுவை சிகிச்சையா என்பதை காலம் மட்டுமே உணர்த்தும்.

பிரதமர் மோடியின் துணிச்சலான முயற்சிக்குப் பாராட்டுகள். எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் சுமூகமாக பிரதமரின் முயற்சி வெற்றி பெற பிரார்த்திக்கிறோம்.

சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com)

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024