ஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணத்தையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 12 மணியளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின் தமிழ் சாரம் இது:
தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று (5.12.16) இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை சொல்லவியலா துயரத்தோடு பகிர்ந்துகொள்கிறோம்.
மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா காய்ச்சல், நீர்ப்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாண்புமிகு முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட பல்நோக்கு சிகிச்சை காரணமாக அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வாய் வழியே உணவு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு உடல்நிலை சீரடைந்து வந்தது. இதனடிப்படையில் மாண்புமிகு முதல்வர் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து உயர் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கே எங்களின் மருத்துவ நிபுணர் குழு அவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தது.
இந்நிலையில், திடீரென டிசம்பர் 4, 2016-ல் துரதிர்ஷ்டவசமாக மாண்புமிகு முதல்வர் இதய துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்டார். அருகிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இருந்ததால், முதல்வருக்கு உடனே சர்வதேச அளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட முறையான எக்மோ முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்த அளவில் முயற்சி செய்து சிறந்த சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (5.12.2016) இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
அப்போலோ குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஊழியரும், மருத்துவரும் தங்களால் இயன்ற அளவிற்கு மாண்புமிகு முதல்வரை அக்கறையாக பார்த்துக்கொண்டார்கள். நவீன சிகிச்சை முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு மாண்புமிகு முதல்வரை ஆற்றுப்படுத்த ஓய்வின்றி உழைத்தோம். இந்திய தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் நேர்ந்த இந்த அளவுகடந்த துயரத்தில் நாங்களும் கனத்த இதயத்தோடு பங்கெடுத்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment